புதுடெல்லி: மத்தியப் பிரதேசத்திலிருந்து மேலவைக்குப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாள்களில், உத்தரப் பிரதேச மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி சனிக்கிழமை விலகினார்.
நவம்பர் 14ஆம் தேதி முதற்கொண்டு அவரது பதவி விலகலை மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஏற்றுக்கொண்டதாக மாநிலங்களவைப் பொதுச் செயலாளர் பி.சி. மோடி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலங்களவை உறுப்பினராக திரு பூரியின் பதவிக்காலம் நவம்பர் 25ஆம் தேதி நிறைவடையவிருந்தது. இந்நிலையில், நவம்பர் 5ஆம் தேதி மத்தியப் பிரதேசத்திலிருந்து அவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது புதிய பதவிக்காலம் 2030ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி வரை தொடரும்.
தமிழ்நாட்டில் கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் எல். முருகன் கடந்த மாதம் தமது பதவியிலிருந்து விலகினார். அதனால், காலியான மத்தியப் பிரதேச மாநிலங்களவை இடத்திற்கு திரு பூரி பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.
திரு பூரியின் பதவி விலகல் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அறிவித்து மாநிலங்களவைப் பொதுச் செயலாளர் பி.சி. மோடி வெளியிட்ட அறிக்கையில், “உத்தரப் பிரதேச மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிலங்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரான திரு ஹர்தீப் சிங் பூரி தமது மாநிலங்களவைப் பதவியிலிருந்து விலகியுள்ளார். அவரது பதவி விலகலை 2026ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி முதற்கொண்டு மாநிலங்களவைத் தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளார்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
