காவலர்களை ஏமாற்றி, கைதிக் கணவனை ‘ஸ்கூட்டி’யில் ஓட்டிச் சென்ற பெண்!

1 mins read
3150f023-348f-4b09-b078-92a04ce15436
கைதியை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட காவல்துறை வாகனம். - படம்: இந்திய ஊடகம்

சண்டிகர்: காவலர்களை ஏமாற்றி, சிறைக்கைதியாக இருந்த கணவனைப் பெண் ஒருவர் மீட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அதிர்ச்சிச் சம்பவம் இந்தியாவின் அரியானா மாநிலத்தில் நிகழ்ந்தது.

உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா நகரைச் சேர்ந்த காவலர்கள் மூவர், அனில் என்ற விசாரணைக் கைதியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக, அவரை ஹரியானா மாநிலத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அனில், ஹரியானா மாநிலத்தின் ஹோதால் பகுதியைச் சேர்ந்தவர். அவர்மீது ஹரியானாவிலும் உத்தரப் பிரதேசத்திலும் குறைந்தது எட்டு வழக்குகள் இருப்பதாகக் காவல்துறை தெரிவித்தது.

உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் ஒரு வழக்குத் தொடர்பில் அனில் மதுரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், நீதிமன்ற விசாரணைக்காக அண்மையில் ஹோதாலுக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அவருடன் காவல்துறை உதவி துணை ஆய்வாளர் ஒருவரும் இரண்டு காவலர்களும் சென்றனர்.

நீதிமன்ற விசாரணை முடிந்ததும் அவர்கள் நால்வரும் காவல்துறை வேனில் மதுரா திரும்பிக்கொண்டிருந்தனர். தேசிய நெடுஞ்சாலை 19ஐ அவர்கள் நெருங்கியபோது, மோட்டார்சைக்கிளில் வந்த அனிலின் மனைவி, காவலர்களை ஏமாற்றி, தன் கணவனை ஏற்றிக்கொண்டு, மாயமாய் மறைந்துவிட்டதாகக் கூறப்பட்டது.

அப்பெண் எப்படிக் காவலர்களை ஏமாற்றினார் என்பது தெரியவில்லை.

ஆயினும், அவருடைய இந்தத் துணிச்சலான முயற்சி, திரைப்படத்தையும் விஞ்சும் வகையில் இருந்ததாகக் கூறப்பட்டது.

இதனால் அவமானப்பட்ட காவல்துறை, தப்பியோடிய அனிலைப் பிடிக்கும் முயற்சியைத் தீவிரப்படுத்தியுள்ளது. அனிலின் மனைவிமீதும் காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.

கவனக்குறைவாக இருந்ததற்காக அம்மூன்று காவலர்களும் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்நோக்குகின்றனர்.

குறிப்புச் சொற்கள்