கிருஷ்ணகிரி: தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே, 23 தொழிலாளர்களுடன் சென்ற காலணி தயாரிக்கும் தனியார் நிறுவனத்தின் பேருந்து, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தீப்பிடித்தது.
இதில் பேருந்தும் இருசக்கர வாகனமும் முழுமையாக எரிந்து சாம்பலாகின.
பேருந்து ஊத்தங்கரை நாட்டாண் கொட்டாய் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திருவண்ணாமலையிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற கார் முந்த முயன்றது. அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனம் எரியத் தொடங்கியதும், பேருந்து மீதும் தீ பரவியது.
சிறிது நேரத்தில் தீ மளமளவென அனைத்து இடங்களிலும் பரவியுள்ளது.
தீ பரவுவதற்கு முன்பே பேருந்திலிருந்த ஓட்டுநர், 23 தொழிலாளர்களும் சுதாரித்துக்கொண்டு வெளியேறியதால், அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்.
எதிரே வந்த இருசக்கர வாகனம் அதிவேகமாக வந்ததே விபத்துக்கு முக்கியக் காரணமாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து வாகனங்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்பகுதியில் பனிமூட்டம் காரணமாகத் தொடர்ந்து விபத்துகள் நிகழ்வது குறிப்பிடத்தக்கது.

