புதுடெல்லி: இந்தியாவின் கிழக்கு, மத்திய, வடகிழக்குப் பகுதிகள் சிலவற்றில் ஏப்ரல்-ஜூன் மாதங்களில் வழக்கத்தைவிட அதிகமான நாள்கள் அனல் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டின் வானிலை நிலையம் அதன் மாதாந்தர முன்னுரைப்பில் தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கமான அளவு அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, கிழக்கு, வடகிழக்குப் பகுதிகளின் பெரும்பாலான இடங்கள், மத்திய இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள இடங்கள் உள்ளிட்டவற்றில் மட்டும் வழக்கத்ததைவிட அதிகமான வெப்பநிலை பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“ஆண்டுதோறும் பொதுவாக வெப்பநிலை அதிகமாக இருக்கும் காலத்தில் (ஏப்ரல், மே, ஜூன்) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கமாக இருக்கும் குறைந்தபட்ச வெப்பநிலையைவிட அதிகமாகப் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரா, தெலுங்கானா ஆகியவற்றின் சில பகுதிகள் மட்டும் இதற்கு விதிவிலக்கு; அவற்றில் குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கநிலையில் அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று இந்திய வானிலை நிலையம் கூறியது.
நாட்டில் பல பகுதிகளில் ஏப்ரல் மாதத்துக்கான அதிகபட்ச வெப்பநிலை வழக்கநிலையில் அல்லது அதற்கும் குறைவாகப் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் நிலையம் குறிப்பிட்டது.

