பெங்களூரில் கனமழை; மருத்துவமனை சுவர் இடிந்து விழுந்து எண்மர் உயிரிழப்பு

பெங்களூரில் கனமழை; மருத்துவமனை சுவர் இடிந்து விழுந்து எண்மர் உயிரிழப்பு

1 mins read
594534e9-ccba-4c42-8d27-de74dfbb76c0
பெங்களூருவில் ஏப்ரல் 29ஆம் தேதி பெய்த கனமழையால், சிவாஜி நகரில் உள்ள பழமையான‌ பவுரிங் மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.  - படம்:டெக்கன் ஹெரால்ட்

பெங்களூரு: கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் புதன்கிழமை (ஏப்ரல் 29) மாலை பெய்த கனமழையால், பவுரிங் மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

அதில், எண்மர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெங்களூரில் கடந்த இரு மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், ஏப்ரல் 29ஆம் தேதி மாலை 5 மணியளவில் பலத்த இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

இதனால் சாலைகளும் தொழில்நுட்ப நிறுவனங்களும் பனிமழை பெய்தது போன்று காட்சியளித்தது.

சிவாஜி நகர், கம்மனஹள்ளி, கிருஷ்ண ராஜபுரம், ராஜாஜி நகர், மெஜஸ்டிக், ஹெப்பால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கொட்டிய மழையால் ஆங்காங்கே சாலையோர மரங்களும் மின் கம்பங்களும் சாய்ந்தன.

சிவாஜி நகரில் உள்ள பழமையான‌ பவுரிங் மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

அதில் சாலையோர கடைக்காரர்களும் மழைக்கு ஒதுங்கியவர்களும் சிக்கிக் கொண்டனர்.

அந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட எண்மர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மீட்புப் பணிகளை முடுக்கி விட்டனர்.

காயமடைந்தோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட அம்மாநில முதல்வர் சித்தராமையா, உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார்.

இதற்கிடையே, பெங்களூரில் கனமழையால் நேர்ந்த மற்ற சம்பவங்களில் மூவர் உயிரிழந்தனர்.

இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்