தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கனமழை: மகாராஷ்டிராவில் மும்பை உட்பட 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

2 mins read
ee301ad2-3bf6-42a9-ba23-15bd518b7f0c
 மகாராஷ்டிராவில் இடைவிடாமல் மூன்றாவது நாளாக நீடித்த மழை காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. - படம்: ஊடகம்

மும்பை: வட இந்திய மாநிலங்களைக் கனமழை தொடர்ந்து புரட்டிப் போட்டு வரும் நிலையில், மகாராஷ்டிராவில் இடைவிடாமல் மூன்றாவது நாளாக நீடித்த மழை காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ளது.

இந்நிலையில், மும்பை உட்பட ஏழு மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 11,800 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் பலத்த காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 28) மகாராஷ்டிராவில் மழை காரணமாக பத்து பேர் உயிரிழந்துவிட்டனர். நாசிக் பகுதியில் வீடு இடிந்து விழுந்த சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோதாவரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக ஜெயக்வாடி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், மராத்வாடா பகுதி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளப்பெருக்கு அச்சம் காரணமாக, பைதான் பகுதியில் இருந்து 7,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.

ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில், ஹர்சுல் வட்டத்தில் ஏறக்குறைய 196 மில்லிமீட்டர் மழை பதிவானது.

வழக்கம்போல் இம்முறையும் மழை வெள்ளம் காரணமாக மும்பை மாநகரம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஞாயிற்றுக்கிழமையன்று பல இடங்களில் அவ்வப்போது மழை பெய்தது.

சில பகுதிகளில் மட்டும் காலை 8 முதல் பிற்பகல் 1 மணி வரையிலான ஐந்து மணிநேரத்தில் மட்டும் 50 மில்லிமீட்டர் மழை பதிவானதாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், பிற்பகலுக்குப் பின் மழையின் தீவிரம் சற்றே தணிந்த நிலையில், வாகன, ரயில் போக்குவரத்து ஓரளவு சீரடைந்தது.

அக்டோபர் 3ஆம் தேதி வரை மகாராஷ்டிரா முழுவதும் பரவலாகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்