ஜாம்ஷெட்பூர்: இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம், கிழக்கு சிங்பும் மாவட்டத்தில் வெள்ளத்தில் தத்தளித்த தனியார் உண்டுறைப் பள்ளியில் சிக்கிக்கொண்ட 162 மாணவர்களை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) காவல்துறையினர் மீட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கனமழை காரணமாகப் பள்ளி வளாகத்தை வெள்ளம் சூழ்ந்ததால், சனிக்கிழமை இரவு முதல் கோவாலி காவல் நிலையப் பகுதியில் உள்ள பள்ளியில் மாணவர்கள் சிக்கிக் கொண்டனர்.
“லவ் குஷ் பள்ளி மாணவர்கள் சிக்கிக்கொண்டுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. பள்ளிக் கட்டடத்தை நீர் சூழ்ந்ததால் ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களையும் கூரைக்கு மாற்றினர். அங்கு அவர்கள் இரவுப் பொழுதைக் கழித்தனர்.
“ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) அதிகாலை 5.30 மணியளவில் தகவல் கிடைத்ததும் காவல்துறை அதிகாரிகளும் தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களின் உதவியுடன் மாணவர்களை மீட்டனர்,” என்று காவல்துறைக் கண்காணிப்பாளர் ரிஷபா கார்க் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
மீட்பு நடவடிக்கைக்காகப் படகுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் வருவதற்கு முன்பே காவல்துறையினர் மாணவர்களை மீட்கும் படையில் ஈடுபட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.
மழை காரணமாக பள்ளிக் கட்டடம் முற்றிலுமாக நீரில் மூழ்கியதாக கோவாலி காவல் நிலையப் பொறுப்பாளர் தனஞ்சய் பாஸ்வான் தெரிவித்தார்.
“மறுஅறிவிப்பு வரும் வரை பள்ளி மூடப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
துமாரியா, காட்ஷிலா, முசாபானி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களை அவரவர் வீடுகளுக்கு அனுப்ப மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளைச் செய்து வரும் நிலையில், உள்ளூர் மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர் என்று திரு பாஸ்வான் தெரிவித்துள்ளார்.