புதுடெல்லி: இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கனமழை தொடரும் நிலையில் மேகவெடிப்பு, திடீர் வெள்ளம், நிலச்சரிவு போன்ற சம்பவங்களில் கிட்டத்தட்ட 63 பேர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 100க்கு மேற்பட்டோரைக் காணவில்லை.
மாநிலம் முழுவதும், வரும் திங்கட்கிழமை (ஜூலை 7) வரை கனமழைக்கான விழிப்பு நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய கனமழையால் ரூ. 400 கோடி மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்ததாக மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முழுமையான தகவல்கள் கிடைத்த பிறகு இது மேலும் உயரக்கூடும் என்று மாநிலப் பேரிடர் நிர்வாக ஆணையம், வருவாய்த் துறை ஆகியவற்றுக்கான சிறப்புச் செயலாளர் கூறினார்.
தற்போது தேடல், மீட்புப் பணிகளில் கவனம் செலுத்தப்படுவதாக அவர் சொன்னார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இமாச்சலப் பிரதேச மாநிலம் மட்டுமன்றி மழையால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத், உத்தரகாண்ட், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களுக்கும் நிவாரண உதவி வழங்க உறுதியளித்துள்ளார்.
போதிய எண்ணிக்கையில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
இமாச்சலப் பிரதேசத்தில் ஜூன் 20ஆம் தேதியிலிருந்து பருவமழை பெய்துவருகிறது.
மாண்டி மாவட்டம் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அண்மைய தகவல்கள் கூறுகின்றன. அங்கு 17 பேர் மாண்டுவிட்டனர். மேலும் 40 பேரைக் காணவில்லை.
கங்ரா மாவட்டத்தில் 13 பேரும் சம்பா மாவட்டத்தில் அறுவரும் ஷிம்லாவில் ஐவரும் உயிரிழந்ததாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. 14 பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
நூற்றுக்கணக்கான கால்நடைகளும் மாண்டுவிட்டன.
கனமழையால் இமாச்சலப் பிரதேசத்தில் 500க்கும் மேற்பட்ட சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன.
பல இடங்களில் ஆறுகள் கரைபுரண்டு ஓடுவதை சமூக ஊடகங்களில் வெளியான படங்கள் காட்டுகின்றன.

