தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோல்கத்தாவில் கொட்டிய கனமழை

2 mins read
a3ef877c-12ff-430e-99c1-af0c4f736cb4
கொட்டித் தீர்த்த மழையால் வீடுகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் முழங்கால் அளவுக்கு நீர் சூழ்ந்துள்ளது. - படம்: இந்திய ஊடகம்

கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கோல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23) பெய்த கனத்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக 7 பேர் மாண்டனர்.

கோல்கத்தா நகரம் மற்றும் அதனையொட்டி உள்ள சுற்றுப்புறப் பகுதிகளில் மழை காரணமாகப் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியது.

கொட்டித் தீர்த்த மழையால் வீடுகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் முழங்கால் அளவுக்கு நீர் சூழ்ந்துள்ளது. மேலும், சாலையில் தேங்கிய மழைநீர் காரணமாகப் போக்குவரத்தும் முடங்கியது.

மெட்ரோ ரயில் சேவையும் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 42 விமானங்கள் தாமதமாகின.

விமான நிலைய ஓடுதளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் விமானங்களின் புறப்பாடு மற்றும் தரையிறக்கம் தாமதமாகியுள்ளன. பயணிகள் விமானத்தின் நிலைகுறித்து தெரிந்து கொண்டு விமான நிலையத்திற்கு வரும்படி இண்டிகோ, ஏர் இந்தியா விமான நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

மேற்கு வங்க மாநிலத்தின் தெற்குப் பகுதியில் உள்ள மாவட்டங்களில் இன்னும் சில நாள்களுக்கு மழைப்பொழிவு தொடரும் என இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

காரியா காம்தஹாரியில் சில மணி நேரத்தில் 332 மிமீ மழை பெய்தது, இது அதிகபட்ச மழையாக அமைந்தது. ஜோத்பூர் பூங்கா, காளிகாட், டாப்சியா, பாலிகஞ்ச் மற்றும் வடக்கு கோல்கத்தாவின் தந்தானியா போன்ற பிற பகுதிகளிலும் கனத்த மழை பெய்தது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் மேற்குப் பகுதியில் பெய்த மழையால் ஒருவர் உயிரிழந்தார். வெள்ளம் ஏற்பட்டதால் 14 பேர் அந்நீரில் சிக்கினர். அவர்களை ஹெலிகாப்டர் மூலம் அதிகாரிகள் மீட்டனர்.

ஒடிசா மாநிலத்தில் வரும் 28ஆம் தேதிவரை மழை தொடரும் என வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்