செப்டம்பரில் அதிக மழை: நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு

2 mins read
18e7ca18-be66-408c-a967-13cb4e222b0c
ஆகஸ்ட் 27ஆம் தேதி தாவி ஆறு பெருக்கெடுத்து ஓடியதில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இம்மாதம் வழக்கத்திற்கு மாறாக அதிக மழை பெய்யக் கூடும். இதனால் திடீர் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்கெனவே மழை-வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இமயமலையை ஒட்டிய ஜம்மு-காஷ்மீர், உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசத்தில் மேகவெடிப்பால் பெருவெள்ளமும் நிலச்சரிவுகளும் நேரிட்டன. இதனால், கடுமையான உயிர்ச்சேதமும், பொருள்சேதமும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

“நாட்டில் கடந்த ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை 743.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது நீண்ட கால சராசரியைவிட (700.7 மி.மீ.) 6 விழுக்காடு அதிகம். ஆகஸ்ட்டில் 268.1 மி.மீ. மழை பதிவானது.

இது, சராசரியைவிட 5.2 விழுக்காடு அதிகம். வடமேற்கு இந்தியாவில் 265 மி.மீ. மழை பதிவானது. கடந்த 2001க்குப் பிறகு இதுவே அதிகபட்ச மழைப்பொழிவாகும்.

“தென் தீபகற்ப பகுதியில் ஆகஸ்டில் பதிவான மழையளவு 250 மி.மீட்டர் இது, இயல்பைவிட 31 விழுக்காடு அதிகம். தற்போதைய பருவமழைக் காலத்தில் கடந்த மூன்று மாதங்களிலும் இயல்பைவிட அதிக மழை பதிவாகியுள்ளது.

“செப்டம்பரில் நீண்டகால சராசரியைவிட 109 விழுக்காடு அதிக மழைப்பொழிவு இருக்கும். வடகிழக்கு, கிழக்கு இந்தியாவின் சில பகுதிகள், கடைக்கோடி தென்தீபகற்ப பகுதிகளைத் தவிர்த்து, நாடு முழுவதும் பரவலாக அதிக மழைப்பொழிவு காணப்படும்.

“உத்தராகண்டில் திடீா் வெள்ளமும், நிலச்சரிவுகளும் நேரிட வாய்ப்புள்ளது. இம்மாநிலத்தில் தொடங்கும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோரப் பகுதிகள் பாதிக்கப்படக் கூடும். அரியாணா, டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் மழை வெள்ளப் பாதிப்புகள் இருக்கும்,” என்று தெரிவித்தார்.

“வங்கக் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை, வழக்கமாக ஒடிசா வழியாகக் கடந்து செல்லும். இம்முறை மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாகக் கடந்து சென்றன.

இதன் தாக்கத்தால் வடமேற்கு இந்தியாவில் அதிக பாதிப்புகள் நேரிடும்,” என்று மிருத்யுஞ்சய் மொஹபத்ரா எச்சரித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்