வதோதரா: இந்தியாவின் குஜராத் மாநிலம், வதோதராவில் கனமழை காரணமாக குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்த 24 முதலைகளை வனத்துறையினர் மீட்டனர்.
கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதிமுதல் 29ஆம் தேதிவரை வதோதராவில் பெய்த கனமழையில், அந்நகரில் ஓடும் விசுவாமித்திரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
அவ்வாற்றில் கிட்டத்தட்ட 440 முதலைகள் இருப்பதாகவும் அஜ்வா அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளத்தின்போது அவற்றுள் பல குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்துவிட்டதாகவும் வனத்துறை அதிகாரி கரண்சிங் ராஜ்புத் கூறினார்.
“இந்த மூன்று நாள்களில் மட்டும் 24 முதலைகளுடன், பாம்பு, கருநாகம், 40 கிலோ எடைகொண்ட பெரிய ஆமை, முள்ளம்பன்றி என வேறு 75 விலங்குகளையும் பிடித்துள்ளோம். விசுவாமித்திரி ஆற்றங்கரையோரம் பல குடியிருப்புப் பகுதிகள் உள்ளன,” என்று அவர் சொன்னார்.
தாங்கள் மீட்ட முதலைகளில் ஆகச் சிறியது இரண்டு மீட்டர் நீளத்துடனும், ஆகப் பெரியது 14 மீட்டர் நீளத்துடனும் இருந்தன என்றும் திரு ராஜ்புத் குறிப்பிட்டார்.
ஆயினும், நீரிலிருந்து தரைக்கு வந்த முதலைகளால் மனிதர்களுக்குத் தீங்கு எதுவும் நேரவில்லை என்றும் அவர் கூறினார்.
“பொதுவாக, முதலைகள் மனிதர்களைத் தாக்காது. ஆற்றில், மீன்களையும் விலங்குகளின் உடல்களையும் உண்டு அவை உயிர்வாழும். நாய்கள், பன்றிகள், மற்ற சிறு விலங்குகளையும் அவை கொன்று உண்ணக்கூடும். அத்தகைய காணொளி ஒன்று அண்மையில் பரவியது,” என்றார் திரு ராஜ்புத்.
விசுவாமித்திரி ஆற்றில் நீர்மட்டம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதால், மீட்கப்பட்ட முதலைகளும் மற்ற விலங்குகளும் ஆற்றில் விடப்படும் என்றும் அவர் சொன்னார்.

