ஆந்திராவில் கனமழை; வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 48ஆக உயர்வு

2 mins read
e6d9e55e-42cb-4ec2-9d14-061db2318a63
தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மீட்புப் பணியாளர்களுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. - படம்: ஊடகம்

விசாகப்பட்டினம்: ஒடிசா மாநிலத்தின் பூரி அருகே புயல் கரையைக் கடந்தபோது, ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம், அல்லூரி, சீதாராம ராஜு, விஜயநகரம், ஸ்ரீகாகுளம், பார்வதி மன்யம், அனகாபல்லி ஆகிய மாவட்டங்களில் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மேலும் 13 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் இரண்டு பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

இந்நிலையில், அல்லூரி மாவட்டத்தின் சட்ராயபல்லி எனும் இடத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழையால் கடந்த திங்கட்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். 4 பேரை மீட்புப்படையினர் மீட்டனர்.

நர்சிபட்டினம்- பத்ராசலம் தேசிய நெடுஞ்சாலையில் 12 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் 16 கி.மீ.தூரம்வரை சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்பு 48 ஆனது

ஆந்திராவில் கடந்த வாரத்திலிருந்து பெய்துவரும் வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது.

கனமழை, வெள்ளத்தால் என்டிஆர் மாவட்டமே ஆக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதுவரையிலும் வீடுகளை இழந்து தவிக்கும் 48,000க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கனமழை, வெள்ளத்தால் விவசாயம், உள்கட்டமைப்புப் பணிகள், மீன்பிடித் தொழில் ஆகிய துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் கோனசீமா, காக்கிநாடா, என்டி.ஆர்.கிருஷ்ணா, கோதாவரி ஆகிய மாவட்டங்களிலும் மேலும் சில நாள்களுக்குக் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதை முதல்வர் சந்திர பாபு நாயுடு திங்கட்கிழமை பார்வையிட்டார். அவர் கடந்த ஒன்பது நாள்களாக வீட்டுக்குச் செல்லாமல் விஜயவாடா ஆட்சியர் அலுவலகத்தில் தங்கி பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதித் திரட்டில் மக்கள் பங்கெடுத்து உதவ வேண்டும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விரைவில் வழக்கநிலை திரும்பும்

விஜயவாடாவில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளும் நிவாரணப் பணிகளும் செவ்வனே நடைபெற்று வருகிறது. இப்போது நிவாரணப் பணிகள் கடைசிக்கட்டத்தில் உள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்பிவிடும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்