ஹைதராபாத்: இந்தியாவின் தென் மாநிலங்களைக் கனமழை புரட்டிப் போட்டு வருகிறது.
தெலுங்கானாவில் கடந்த இரு நாள்களாகப் பெய்துவரும் கனமழை மேலும் தீவிரம் அடைந்துள்ளது. அங்குள்ள 14 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் புதன்கிழமை (ஜூன் 11) இரவு தொடங்கிய மழை இடைவிடாமல் பெய்து வருவதால் அந்நகரில் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது.
வாகனப் போக்குவரத்து முடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹைதராபாத் பல்கலைக்கழகப் பகுதியில் ஆக அதிகமாக 114 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஜூன் 13 இரவு வரை ஹைதராபாத்தில் மிதமான, இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை நிலையம் தெரிவித்தது.
ஜூன் 14ஆம் தேதி வரை தெலுங்கானாவில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை பொருந்தும் என்றும் வானிலை நிலையம் கூறியது.
அதிலாபாத், அசிஃபாபாத், ஜகதில், விகாராபாத், நாகர்கர்னூல், நாராயண்பெட் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் மணிக்கு ஐம்பது கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
எனவே, பொதுமக்கள் காரணமின்றி வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, ஆந்திராவிலும் அடுத்த ஐந்து நாள்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை நிலையம் கூறியது.
மேற்கு வங்கத்தின் மேற்குப் பகுதியிலும் ஆந்திரக் கரையோரப் பகுதியிலும் உருவாகி உள்ள புதிய புயல் சின்னம் காரணமாக, அதிக மழையை எதிர்பார்க்கலாம் என வானிலை நிலைய விஞ்ஞானி டாக்டர் சக்லி கருணா, பிடிஐ செய்தி முகவையிடம் தெரிவித்தார்.
கர்நாடகாவில் பல்வேறு பகுதிகளில் நீடித்து வரும் கனமழையால் பள்ளிகள் மூடப்பட்டன.
தர்வாட் மாவட்டத்தில் அதிக மழை பதிவாகி உள்ளது. ஜூன் 12ஆம் தேதி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
தக்ஷின கன்னட மாவட்டத்துக்கு அதிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை நிலையத்தின் இணை ஆணையர் தியா பிரபு தெரிவித்தார்.
மாநிலம் முழுவதும் ஜூன் 17ஆம் தேதி வரை பலத்த மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இரண்டு தேசியப் பேரிடர் மீட்புக் குழுக்கள் அம்மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதற்கிடையே, ஆந்திர கரையோரப் பகுதியில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக, புதுவை, காரைக்கால் பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது.
இந்நிலையில், ஜூன் 16ஆம் தேதி வரை, கோவை, நீலகிரி, தேனீ, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
அம்மாவட்டங்களில் அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.