உத்தராகண்ட்டில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்: ஏழு பேர் உயிரிழப்பு

1 mins read
81cd5179-6ac5-462b-8ec3-578924821380
ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதாக உத்தராகண்ட் சிவில் விமானப் போக்குவரத்து மேம்பாட்டு ஆணையம் தெரிவித்தது. - படங்கள்: இந்திய ஊடகம்
multi-img1 of 2

டேராடூன்: இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) அதிகாலை 5.20 மணி அளவில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியது.

சம்பவம் நிகழ்ந்தபோது ஹெலிகாப்டரில் விமானி உட்பட ஏழு பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் சிறுவர் ஒருவரும் இருந்ததாக நம்பப்படுகிறது.

அவர்கள் அனைவரும் மாண்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஹெலிகாப்டரின் பயணிகள் உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று செய்தி வெளியானது.

உத்தராகண்ட்டின் கௌரிகுந் பகுதியில் ஹெலிகாப்டர் மாயமானதாக அதிகாரிகள் கூறினர்.

டேராடூனிலிருந்து கேதார்நாத்துக்கு ஹெலிகாப்டர் சென்றுகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதாக உத்தராகண்ட் சிவில் விமானப் போக்குவரத்து மேம்பாட்டு ஆணையம் தெரிவித்தது.

மாநிலப் பேரிடர் நடவடிக்கைப் படை, உள்ளூர் நிர்வாகம் ஆகியவற்றுடன் சேர்ந்து மற்ற மீட்புக் குழுக்களும் தேடுதல், மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

மோசமான வானிலை காரணமாக விபத்து நிகழ்ந்தது என அதிகாரிகள் தெரிவித்ததாக இந்தியா டுடே செய்தி நிறுவனம் கூறியது.

இமய மலைப்பகுதிகளில் உள்ள புனிதத் தலங்களுக்குச் செல்ல பண வசதி உள்ளவர்களுக்காக ஹெலிகாப்டர் சேவைகளைப் பல நிறுவனங்கள் வழங்குகின்றன.

கடந்த மாதம் இதே போன்ற நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஆறு பேர் மாண்டனர்.

குறிப்புச் சொற்கள்