சென்னை: சென்னை மாநகராட்சியில் செயல்படும் கடைகள் மே 30ஆம் தேதிக்குள் தமிழில் பெயர்ப் பலகை வைக்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது.
தொழில் நிறுவனங்கள், கடைகளின் பெயர்ப் பலகை தமிழில் பெரிதாக வைக்க வேண்டும். அதற்கு அடுத்த அளவில் ஆங்கிலத்திலும் அதற்கும் குறைந்த அளவில் விருப்பமுள்ள பிற மொழிகளில் வைக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.
ஆனால், அதற்கு எதிர்மறையாக தமிழ் எழுத்துக்கள் சிறிய அளவிலும் பிற மொழிகளில் பெரிதாகவும் வைக்கப்பட்டு இருப்பது குறித்து புகார்கள் மாநகராட்சிக்கு வந்தன.
இதனையடுத்து, மே 30ஆம் தேதிக்குள் விதிமுறையைப் பின்பற்றி தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது.
இந்நிலையில், இந்த உத்தரவை அமல்படுத்த கால அவகாசம் வழங்கக் கோரி சில்லறை வணிகர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வணிகர்களுக்குக் கால அவகாசம் வழங்கக் கோரிய விண்ணப்பத்தை நான்கு வாரங்களில் பரிசீலிக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், அதுவரை தமிழில் பெயர்ப் பலகை வைக்காத கடைகள்மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

