பெங்களூரு: கடந்த 115 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டித் தீர்ந்த கனமழையால் பெங்களூர் நகரம் வெள்ளக்காடாக மாறியுள்ளது. கனமழையால் மூன்று பேர் பலியாகிவிட்டனர்.
கடந்த 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு, மே மாதத்தில் பெங்களூரில், இரண்டாவது ஆக அதிக மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.
இதையடுத்து, வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக, பெங்களூருவின் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பல சாலைகள் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. சுரங்கப்பாதைகள் பல மூடப்பட்டதால் வாகனவோட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை (மே 19) பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் அடித்தளங்கள், தாழ்வான பகுதிகள் எனப் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
பெங்களூரு வரலாற்றில், 1909 மே 6ஆம் தேதி அதிகபட்ச மழை பதிவானது. அச்சமயம் 153.9 மி.மீ. மழை பதிவான நிலையில், தற்போது மே 19ஆம் தேதியன்று காலை 8.30 மணிவரை, 105.5 மி.மீ. மழை பெய்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பெங்களூரு மட்டுமல்லாமல், கர்நாடகாவின் மற்ற பல மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மே 22ஆம் தேதி வரை, தலைநகரான பெங்களூரில் கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கிய பலர் சிறு படகுகள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கடந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில், நகர உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காகச் செலவுசெய்த கோடிக்கணக்கான ரூபாய், எந்தவிதப் பலனையும் தரவில்லை என எதிர்க்கட்சியான பாஜக குற்றஞ்சாட்டி உள்ளது.
இந்நிலையில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் மழைநீர் வடிகால்களை மறுவடிவமைப்பு செய்து தூர்வாருமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.