சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கிய 67 பேரை செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட ஒரு நாய் காப்பாற்றியது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பெய்து வரும் பருவமழை அம்மாநிலத்தைப் புரட்டிப்போட்டுள்ளது. பல இடங்களில் வெள்ளம் காரணமாகமுக்கியச் சாலைகள் துண்டிக்கப்பட்ட[Ϟ]தாலும் சிறிய பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாலும் போக்குவரத்து முடங்கியுள்ளது. ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
மண்டி மாவட்டத்தைச் சேர்ந்த சியாத்தி கிராமத்திலும் சில நாள்களாக தொடர்மழை நீடிக்கிறது.
அண்மையில் கிராம மக்கள் அயர்ந்து உறங்கியபோது, அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வளர்த்த ராக்கி என்ற நாய் திடீரென குரைத்துள்ளது. உரிமையாளர் வந்து பார்த்தபோது, வீட்டுச்சுவரில் விரிசல் விழுந்து தண்ணீர் உள்ளே வந்துள்ளது.
பதறிய அவர், மொத்த கிராமத்தினரையும் கூக்குரலிட்டு அழைத்து எச்சரித்தார். அனைவரும் அருகிலுள்ள கோவிலில் தஞ்சமடைந்தனர்.
அடுத்த சில நிமிடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் அங்கிருந்த பல வீடுகள் சேதமடைந்துள்ளன. ஒருவேளை நாயின் உரிமையாளர் எச்சரிக்காமல் போயிருந்தால் பலர் உயிரிழந்திருக்கக்கூடும். 67 பேரின் உயிரைக் காப்பாற்றிய அந்தச் செல்லப்பிராணிக்கும் அதன் உரிமையாளர் நரேந்திராவுக்கும் கிராம மக்கள் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர்.

