ஹைதராபாத்: தேசியத் திறந்தநிலைப் பள்ளிக்கான மையம் மூலம் நடத்தப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 78 கைதிகள் தேர்ச்சி பெற்று புதிய சாதனை படைத்துள்ளனர்.
தெலுங்கானா சிறைத்துறை வரலாற்றில் முதன்முறையாக இத்தகைய சாதனை படைக்கப்பட்டுள்ளது. தேர்வில் தேர்ச்சி பெற்ற கைதிகளுக்கு சிறைத் தண்டனையில் சிறப்புச் சலுகை வழங்கப்படும் எனச் சிறைத்துறை தலைமை இயக்குநர் டாக்டர் சௌமியா மிஸ்ரா அறிவித்துள்ளார்.
தெலுங்கானா சிறைத்துறைக்கும் அங்கு இயங்கும் தேசியத் திறந்தநிலைப் பள்ளிக்கான மையத்துக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்கீழ் இக்கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
சார்லபள்ளி மத்தியச் சிறை, நிஜாமாபாத் மத்தியச் சிறை, ஹைதராபாத் பெண்கள் சிறப்புச் சிறை ஆகிய சிறைகளில் இருந்து மொத்தம் 108 கைதிகள் பத்தாம் வகுப்பு படிப்பில் சேர்க்கப்பட்டனர்.
கைதிகளுக்கு முறையாகக் கற்பிக்க அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான ஊதியத்தையும் சிறைத்துறையே வழங்கியது. ஒரு வருடக் காலத் தொடர் வகுப்புகள், மாதிரித் தேர்வுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட பொதுத்தேர்வில் 78 கைதிகள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் சார்லபள்ளி சிறையிலிருந்து 56 பேரும் நிஜாமாபாத் சிறையிலிருந்து 15 பேரும் பெண்கள் சிறையிலிருந்து 7 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இவ்வெற்றியைத் தொடர்ந்து, தேர்ச்சி பெற்ற கைதிகள் மேல்நிலைக்கல்வி (12ஆம் வகுப்பு), பட்டப்படிப்புகளைத் தொடரவும் சிறைத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
மேலும், புதிதாக 47 கைதிகள் பத்தாம் வகுப்புப் படிப்பில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


