போபால்: மத்தியப் பிரதேசத்தில் ஆறு குழந்தைகளுக்கு ‘எச்ஐவி’ தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஆறு பேரும், மூன்று முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் இயங்கி வருகிறது சர்தார் வல்லபாய் படேல் மருத்துவமனை. இங்கு ‘தலசேமியா’ நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ‘தலசேமியா’ என்பது மரபணு சார்ந்த ஒரு வகை ரத்தக் குறைபாடு நோய் ஆகும்.
சிகிச்சையின் ஒரு பகுதியாக, நோய் பாதித்த குழந்தைகளுக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. அப்போது தவறுதலாக ‘எச்ஐவி’ தொற்று ரத்தத்தைச் செலுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், மருத்துவமனைப் பணியாளர்களின் கவனக்குறைவே குழந்தைகள் பாதிக்கப்படக் காரணம் என்றார்.
இச்சம்பவம் குறித்து விசாரித்த உயர் அதிகாரிகள் கொண்ட குழு, தனது விசாரணை அறிக்கையில் ரத்த வங்கி பொறுப்பு அதிகாரி, ஆய்வக உதவியாளர்கள் இருவர் என மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரைத்தது.
இந்தியாவில் எச்ஐவி பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், சிலரது அலட்சியப்போக்கால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன.
சில வாரங்களுக்கு முன்பு ஜார்க்கண்ட் மாநிலத்திலும் இதேபோன்று தலசேமியா நோய் பாதித்த குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனையில் எச்ஐவி தொற்று உள்ள ரத்தம் செலுத்தப்பட்ட அவலச் சம்பவம் நிகழ்ந்தது.


