கோல்கத்தா தங்குவிடுதியில் பயங்கர தீவிபத்து: 9 பேர் உயிரிழப்பு

கோல்கத்தா தங்குவிடுதியில் பயங்கர தீவிபத்து: 9 பேர் உயிரிழப்பு

2 mins read
979b4a1f-4341-4d74-84b0-2436314202ea
தீ விபத்துக்கான முதற்கட்டக் காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

கோல்கத்தா: தங்குவிடுதி ஒன்றில் ஏற்பட்ட பயங்கரத் தீவிபத்தில் சிக்கி ஒன்பது பேர் பலியான சம்பவம் கோல்கத்தாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கோல்கத்தாவில் உள்ள அந்தத் தங்குவிடுதியில் புதன்கிழமை (ஆகஸ்ட் 19) அதிகாலை அந்தக் கொடூரத் தீவிபத்து ஏற்பட்டது. விடுதிக்குள் சிக்கிக் கொண்டவர்கள் உதவி கேட்டு கூக்குரல் எழுப்பினர். அதைக் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது, விடுதியின் மேல் தளங்களில் இருந்து அடர்ந்த புகையும் தீப்பிழம்புகளும் வெளியேறியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

விபத்து குறித்து உடனடித் தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர், ஐந்து தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்களுடன் காவல்துறையினரும் மாநிலப் பேரிடர் மேலாண்மைப் படையினரும் இணைந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

மேல் தளங்களை நோக்கி எழுந்த அடர்ந்த புகை, வெப்பம் காரணமாகத் தீயணைப்பு வீரர்கள் படிக்கட்டுகள் வழியாக மேலே ஏறுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, குளிரூட்டும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இந்தக் கோர விபத்தில் கோல்கத்தாவின் மிர்சாப் வீதியில் அமைந்துள்ள அந்த விடுதியில் தங்கியிருந்த ஒன்பது பேர் புகை மூட்டத்தால் மூச்சுத்திணறியும் தீக்காயங்களாலும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்ட ஆறு பேர் ஆபத்தான நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்கு வங்கத் தீயணைப்புத் துறையின் தலைமையகம் இந்த விடுதிக்கு அருகிலேயே அமைந்திருந்ததால், பெரும் அசம்பாவிதம், கூடுதல் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தீ விபத்துக்கான முதற்கட்டக் காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்