பெங்களூர்: அர்ப்பணிப்புடன் வேலைசெய்துவரும் தனது ஊழியர்களுக்கு 15 கார்களையும் 22 இருசக்கர வாகனங்களையும் பெங்களூரு நந்தனா பேலஸ் ஹோட்டல் நிறுவனம் பரிசாக வழங்கியுள்ளது.
நிறுவனத்தின் 37ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், அர்ப்பணிப்புடன் பணியாற்றிய 37 ஊழியர்கள் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பெங்களூரு, கோரமங்களாவிலுள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற ‘நந்தனா சாதனையாளர்கள் நாள்’ கொண்டாட்டத்தில் அந்த வாகனங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
பரிசளிக்கப்பட்ட 37 வாகனங்களின் மொத்த மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகம்.
“நான் வங்கி வேலையை விட்டுவிட்டுச் சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்பியதால் இந்த ஹோட்டலைத் தொடங்கினேன். வாழ்க்கை கடினமாக இருந்தாலும் வெற்றிபெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்,” என்று நந்தனா பேலஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஆர்.ரவிச்சந்தர் கூறினார்.
கொவிட்-19 காலத்தில் ஹோட்டல் துறை பின்னடைவைச் சந்தித்தபோது, ஊழியர்களைக் கவனித்துக்கொள்ளத் தமது சொந்தச் சொத்துகளை விற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினராகக் கன்னட நடிகர் ரமேஷ் அரவிந்த் கலந்துகொண்டார்.
“நந்தனா என்பது மகிழ்ச்சியைப் பரப்புவதைக் குறிக்கிறது. ஊழியர்களின் பங்களிப்பை அங்கீகரித்துப் பரிசுகளை வழங்குவது, ஊழியர்கள் மீதான திரு ரவிச்சந்தரின் நன்றியுணர்வைக் காட்டுகிறது,” என்று நடிகர் ரமேஷ் அரவிந்த் பாராட்டினார்.
