புதுடெல்லி: எதிர்வரும் நவராத்திரி, தீபாவளி, ‘சாட்’ பூசைப் பண்டிகைக் காலங்களில் சாலையோர வியாபாரிகள், சிறுகடை உரிமையாளர்கள், மண்பாண்டக் கலைஞர்களை தேவையின்றி அப்புறப்படுத்தவோ, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கவோ கூடாது என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பண்டிகைக் காலங்களில் நகரங்களில் உள்ள சாலையோர வியாபாரிகள் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்படுவதாகவும், அவர்களின் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் பிரியங்க் கனூங்கோ தலைமையிலான அமர்வு தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இதையடுத்து, உள்ளாட்சி அமைப்புகள், காவல் துறையினர் வியாபாரிகளை தேவையின்றி அச்சுறுத்தக்கூடாது என ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தீயணைப்பு அல்லது பாதுகாப்பு காரணங்களுக்காக ஏதேனும் இடத்தை உடனடியாகக் காலி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால், அந்த வியாபாரிகளுக்குப் மாற்று விற்பனை இடங்களை உடனடியாக அமைத்துத் தர வேண்டும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், ‘உள்ளூர் பொருள்களுக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் சிறு வியாபாரிகள், பாரம்பரியத் தொழில்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி அதிகாரிகளுக்கு உடனடியாக இந்த உத்தரவை சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும் என்றும் மாநில தலைமைச் செயலாளர்களுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்துள்ள இந்த முக்கிய உத்தரவு, நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஏழை வியாபாரிகள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
