ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள கமினேனி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்ட ஆடவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளனர்.
இளம்பிள்ளை வாத நோயாளிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுவது இதுவே முதல்முறை என்று கூறப்பட்டது.
தெலுங்கானா மாநிலத்தின் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கர் எனும் 45 வயது ஆடவர் தீவிரமான இதய நோயால் பாதிக்கப்பட்டவர். அவருக்கு இளம்பிள்ளை வாதமும் ஏற்பட்டிருந்ததால் கடந்த மூன்று ஆண்டுகளில் அவரது இதயநோய் மோசமானது.
எனவே அவருக்கு மாற்று இதயம் பொருத்த முடிவெடுத்த மருத்துவர்கள் அதை வெற்றிகரமாக நிறைவேற்றினர்.
பாஸ்கருக்கு முறையற்ற இதயத்துடிப்புடன் ரத்த ஓட்டம் போதிய அளவில் இல்லாததால் பல்வேறு உடல்நலச் சிக்கல்கள் ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
ஐந்து மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சையில், பாஸ்கரின் பழுதான இதயத்தை அகற்றிவிட்டு, மூளைச் சாவால் பாதிக்கப்பட்ட நோயாளியிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட இதயத்தை மருத்துவர்கள் பொருத்தினர்.
தற்போது பாஸ்கரின் உடல்நிலை தேறிவருவதாகவும் விரைவில் அன்றாட நடவடிக்கைகளில் அவர் ஈடுபட முடியும் என்றும் மருத்துவர்கள் கூறினர்.

