ஹைதராபாத்: தெலுங்கானா லஞ்ச ஒழிப்புத் துறை, போக்குவரத்து அதிகாரி ஒருவரின் வீடு, அலுவலகங்களில் சோதனையிட்டு 250 கோடி மதிப்புள்ள சொத்துகளை கைப்பற்றியுள்ளது.
அவை அனைத்தும் மகபூப்நகர் துணை போக்குவரத்து ஆணையர் கிஷன் நாயக்குக்குச் சொந்தமானது என்று அதிகாரிகள் கூறினர்.
ஹைதரபாத்தில் வசித்து வரும் அவரை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக ‘த இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தகவல் தெரிவிக்கிறது.
கிஷன் நாயக் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர், அவரது வீடு, நிஸாம்பாத், நாராயன்கெத் ஆகிய இடங்களில் உள்ள உறவினர்கள் வீடுகள் உட்பட 12 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது சங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள 31 ஏக்கர் நிலம் உட்பட 250 கோடி மதிப்பிலான சொத்துகள் அவருக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விவசாய நிலத்தின் மதிப்பு மட்டும் ரூ.62 கோடி என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கிஷன், மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றியுள்ளார். நிஸாம்பாத், சங்காரெட்டி ஆகிய இடங்களில் உள்ள சொத்து முகவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி பெரும் நிலங்களையும் விவசாயப் பண்ணைகளையும் அவர் வாங்கி குவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஹோட்டல்களிலும் அவர் பங்குகளை வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
சங்கா ரெட்டி மாவட்டத்தில் 31 ஏக்கர் மதிப்பிலான விவசாய நிலம், நிஸாம்பாத் நகராட்சியில் உள்ள 10 ஏக்கர் நிலம், லஹாரி இன்டர்நேஷனல் ஹோட்டலில் 50 விழுக்காடு பங்குகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநர் சாரு சின்ஹா கூறியுள்ளார்.
மேலும் ஒரு கிலோ தங்க நகைகள், வங்கிக் கணக்கில் ரூ.1.37 கோடி பணம், ஆடம்பர கார்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
மாதம் ஒரு லட்ச ரூபாய் முதல் 1.25 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறும் அரசு அதிகாரி ஒருவர், 200 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்துள்ளது சக ஊழியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
விசாரணை தொடர்வதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கூறியுள்ளனர்.

