சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் நீடிக்க தன் மனம் விரும்பவில்லை என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை அண்மையில் சத்தித்தபோது தனது எண்ணத்தைப் பகிர்ந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு செல்வப்பெருந்தகை மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளதாகத் தமிழக காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது. திமுக கூட்டணி தோல்வியடைந்ததால் இந்தப் பேச்சு வலுவடைந்தது.
இந்நிலையில், தவெகவுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் கட்சி தமிழக அமைச்சரவையிலும் இடம்பெற்றது.
தேர்தலுக்கு முன்பு தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தவர்களில் செல்வப்பெருந்தகையும் ஒருவர் என ஊடகங்களும் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலக செல்வப்பெருந்தகை முடிவு செய்துள்ளார்.
தேர்தலுக்கு முன்பு சில கசப்புணர்வு ஏற்பட்டதே தமது முடிவுக்குக் காரணம் என்றும் சில நண்பர்கள் புரிதலின்றிப் பேசுகிறார்கள் என்றும் அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது குறிப்பிட்டார்.
“இனிமேல் மாநிலத் தலைவர் பதவியில் தொடர வேண்டாம் என்று என் உள் மனது சொன்னது. எனவே, கட்சித் தலைமை என்னை விடுவிக்கும் என நம்புகிறேன்,” என்றார் செல்வப்பெருந்தகை.

