புதுடெல்லி: இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒரு விரிவான உலகளாவிய கூட்டாண்மையை உருவாக்குவதில் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் முதல் பதவிக்காலத்தில் இணைந்து பணியாற்றியதை மிகுந்த அன்புடன் தாம் நினைவில் வைத்திருப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ், அமெரிக்காவுக்கான அலுவல்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டார்.
முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கையில், பிரான்ஸ் தலைநகர் பாரிசில், உலகத் தலைவர்கள், உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் பங்கேற்கும் ஏஐ (AI) உச்சநிலை மாநாட்டிற்கு இணை தலைமை தாங்க தாம் ஆவலுடன் காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“அம்மாநாட்டில் பரந்த பொது நன்மைக்காக ஒருங்கிணைந்த, பாதுகாப்பான, நம்பகமான முறையில் ஏஐ தொழில்நுட்பத்திற்கான கூட்டு அணுகுமுறை குறித்த கருத்துகளைப் பரிமாறிக்கொள்வோம்.
“அதிபர் மக்ரோன் உடனான இருதரப்பு பேச்சுவார்த்தையானது இந்தியா, பிரான்ஸ் கூட்டாண்மைக்கான எதிர்காலத் திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கான வாய்ப்பை வழங்கும்.
“வரலாற்றுச் சிறப்புமிக்க பிரெஞ்சு நகரமான மார்செல்லியில் இந்தியாவின் முதல் துணைத் தூதரகத்தை தொடங்கி வைக்க இருக்கிறேன்,” எனப் பிரதமர் மோடி அறிக்கையில் கூறியுள்ளார்.
தனது நண்பர் அதிபர் டோனல்ட் டிரம்ப் தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெற்று பதவியேற்றதைத் தொடர்ந்து அவரைச் சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“எனது இந்தப் பயணம், டிரம்ப்பின் முதல் பதவிக்காலத்தில் ஏற்பட்ட ஒத்துழைப்பின் வெற்றிகளைக் கட்டியெழுப்பவும் தொழில்நுட்பம், வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் விநியோகச் சங்கிலி உள்ளிட்ட துறைகளில் நமது கூட்டாண்மையை மேலும் உயர்த்தவும் ஆழப்படுத்தவும் நல்ல வாய்ப்பாக இருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
“இரு நாட்டு மக்களின் நலனுக்காக நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம். மேலும், உலகிற்குச் சிறந்த எதிர்காலத்தை வடிவமைப்போம்,” என தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.