தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வரிவிதிப்பின் மூலம் இந்தியா, பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்: டிரம்ப்

2 mins read
b725bdeb-e273-4d25-b667-c11054b12e10
அமெரிக்க அதிபர் டிரம்ப். - படம்: ஊடகம்
multi-img1 of 2

வாஷிங்டன்: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலை முடிவுக்குக் கொண்டுவர அவ்விரு நாடுகளுக்கான வர்த்தக உறவுகளை அமெரிக்கா முறித்துக்கொள்ளும் எனத் திட்டவட்டமாக அறிவித்ததே முக்கியக் காரணம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான் இடையே முழு அளவிலான போர் நடக்கும் என்ற சூழலில், அமெரிக்காதான் தலையிட்டு அப்போரைத் தடுத்து நிறுத்தியது என்று வாஷிங்டன், ஓவல் அலுவலகத்தில் திங்கட்கிழமை (அக்டோபர் 6) பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள இரு நாடுகளும் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் மோதிக்கொள்வதை தனது தலையீடு தடுத்தது என்று ஏற்கெனவே பலமுறை அதிபர் டிரம்ப் கூறியபோதும் இந்தியா அதை ஏற்கவில்லை.

இந்நிலையில், வரிவிதிப்பு நடவடிக்கைதான் ஒரு சாத்தியமான போரைத் தடுத்து நிறுத்தியதாக அவர் மீண்டும் கூறியுள்ளார்.

வரிகளை முன்வைத்தே அனைத்து இடங்களிலும் அமெரிக்கா அமைதியை நிலைநாட்டிச் சாதித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், தமக்கு மட்டும் வரிவிதிக்கும் அதிகாரம் இல்லையென்றால் உலகில் நிகழவிருந்த ஏழு போர்களில் குறைந்தபட்சம் நான்கு போர்கள் இந்நேரம் வெடித்திருக்கும் என்றார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் போரைத் தொடங்கத் தயாராக இருந்ததாகவும் ஏழு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

அமெரிக்கா விதித்த வரிகள் பொருளியல் ஆதாயங்களைப் பெற உதவியதுடன், உலகில் அமைதியைப் பேணவும் உதவியதாக அதிபர் டிரம்ப் மேலும் கூறினார்.

அமெரிக்கா வரிவிதிப்பின் மூலம் பல நூறு மில்லியன் டாலரை ஈட்டியிருப்பதுடன், உலக அளவில் அமைதிப்படையாகச் செயல்படுகிறது என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

“இந்தியாவுடனான போர் நிறுத்தத்துக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீர் எனக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தார். அண்மையில் அமெரிக்கா வந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப், மில்லியன்கணக்கான உயிர்களை நான் காப்பாற்றியதாக கூறினார். அவர் அவ்வாறு சொன்ன விதம் எனக்குப் பிடித்திருந்தது,” என்றார் டிரம்ப்.

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட தமது குறுக்கீடு உதவியதாக அமெரிக்க அதிபர் தொடர்ந்து கூறிவரும் நிலையில், இந்திய அரசு அதைத் திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

“இரு நாடுகளும் ஏழு விமானங்களைச் சுட்டு வீழ்த்தின. இது நீடித்தால் எந்த வர்த்தகமும் நடக்க வாய்ப்பில்லை என்று இரு தரப்பிடமும் சொல்லி போரை நிறுத்தினேன்,” என்று வெள்ளை மாளிகையில் பேசும்போது அதிபர் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்