இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்: மீண்டும் உரிமை கோரிய டிரம்ப்

இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்: மீண்டும் உரிமை கோரிய டிரம்ப்

கோப்புப் படம்: பிபிஎஸ்

25 Oct 2026 - 3:53 pm

2 mins read

வாஷிங்டன்: இந்தியா, பாகிஸ்தான் இடையேயான ராணுவ மோதலைத் தாமே தலையிட்டுத் தடுத்து நிறுத்தியதாக மீண்டும் உரிமை கோரியுள்ளார் அமரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்.

அமெரிக்க இடைத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், கடந்த 2025, மே மாதம் இந்தியா மேற்கொண்ட ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையைச் சுட்டிக்காட்டினார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா இந்த நடவடிக்கையைத் தொடங்கியபோது, இரு அணுவாயுத நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடையும் சூழல் உருவானதாக அவர் குறிப்பிட்டார்.

அப்போது இரு நாடுகளின் தலைவர்களையும் தொடர்புகொண்டு தாம் பேசியதாகத் தெரிவித்த டிரம்ப், மோதலை உடனடியாக நிறுத்தாவிட்டால், இருநாடுகளும் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய முடியாது என எச்சரித்ததாக ஃபுளோரிடாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றியபோது அவர் கூறினார்.

இரு நாடுகள் மீதும் 250 விழுக்காடு கடுமையான வர்த்தக வரிகள் விதிக்கப்படும் என்று தாம் எச்சரிக்கை விடுத்த பிறகே, இரு நாடுகளும் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் உதவியின்றி தாமே எட்டுப் போர்களைத் தடுத்து நிறுத்திய போதிலும், தனக்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்படவில்லை என்றும் டிரம்ப் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இந்தியாவின் மறுப்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்த உரிமைகோரலை இந்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் இடையேயான ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை இரு நாடுகளின் ராணுவப் பிரதிநிதிகளுக்கு இடையே நேரடியாகவே நடைபெற்றது என்றும் இதில் மூன்றாவது நாட்டின் தலையீடோ முயற்சிகளோ இல்லை என்றும் இந்திய வெளியுறவு அமைச்சு தெளிவுபடுத்தி உள்ளது.

குறிப்புச் சொற்கள்
பாகிஸ்தான்ராணுவம்டோனல்ட் டிரம்ப்அமெரிக்காஅதிபர்வர்த்தகம்வரி