போபால்: டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் தனக்கு சேதமடைந்த இருக்கை கொடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “இன்று நான் போபாலில் இருந்து டெல்லிக்குப் பயணம் செய்ய இருந்தேன். அதற்காக நான் ஏர் இந்தியா விமானத்தில் டிக்கெட் பதிவு செய்திருந்தேன். எனக்கு ஒதுக்கப்பட்ட 8C இருக்கையில் அமர்ந்தபோதுதான் அது சேதமடைந்து இருக்கிறது என்று எனக்கு தெரியவந்தது.
“சக பயணிகள் இருக்கையை மாற்றி நல்ல இருக்கையில் அமரும்படி என்னை வற்புறுத்தினார்கள். ஆனால் வேறு ஒரு நபருக்கு நான் ஏன் தொந்தரவு கொடுக்கவேண்டும் என்பதால் சேதமடைந்த இருக்கையிலேயே அமர்ந்து பயணம் செய்தேன்,” என்றார்.
“டாடா நிர்வாகம் பொறுப்பேற்ற பிறகு ஏர் இந்தியாவின் சேவை மேம்பட்டிருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. பயணிகளிடமிருந்து முழுத் தொகையையும் வசூலித்த பிறகு, மோசமான மற்றும் வலிமிகுந்த இருக்கைகளில் அவர்களை உட்கார வைப்பது நியாயமில்லை. இது பயணிகளை ஏமாற்றும் வேலை இல்லையா?
“ஏர் இந்தியா நிர்வாகம் எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று வலியுறுத்தியுள்ளார்.