காந்திநகர்: குஜராத்திலுள்ள ஜாம்நகர் மாவட்டத்தில் திறந்த புல்வெளியில் இந்திய ஆகாயப்படை விமானம் விழுந்ததைத் தொடர்ந்து அதன் விமானிகளில் ஒருவர் பலத்த காயங்களால் உயிரிழந்ததாக விமானப்படை வியாழக்கிழமை (ஏப்ரல் 3) தெரிவித்தது.
விமானத்திலிருந்து தக்க நேரத்தில் வெளியேறிய மற்றொரு விமானி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விமானப்படை கூறியது.
ஜாகுவார் போர்விமானம், பயிற்சிக்காகப் பறந்துகொண்டிருந்தபோது திடீரென்று சுவர்டா கிராமத்திலுள்ள புல்வெளி ஒன்றின்மீது விழுந்து நொறுங்கியது. புதன்கிழமை இரவு ஏறத்தாழ 10 மணிக்கு அந்தச் சம்பவம் நேர்ந்ததை அடுத்து காவல்துறையினர், அவசரச் சேவைப் பணியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
உயிரிழப்புக்காக மிகவும் வருந்துவதாகத் தெரிவித்த இந்திய விமானப்படை, உயிர்நீத்த விமானியின் குடும்பத்திற்கு உறுதுணையாய் நிற்பதாகத் தெரிவித்தது. திறந்த புல்வெளியில் விழுந்த விமானத்தால் பொதுமக்கள் காயமடையவில்லை.
சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டதாக விமானப்படை கூறியது.
இதற்கு முன்னதாக மே 2023ல், ராஜஸ்தானில் எம்ஐஜி-21 போர்விமானம், ஹனுமன்கர் கிராமத்திலுள்ள ஒரு வீட்டின்மீது விழுந்த சம்பவத்தில் பொதுமக்கள் மூவர் உயிரிழந்தனர்.