புதுடெல்லி: அரசாங்க ஊழியர்கள் கைது செய்யப்பட்டு 48 மணி நேரத்துக்கு மேல் நீதிமன்ற காவலில் இருந்தால் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக கருதப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீகார் மாநிலம் சமஷ்டிபூரில் அரசுக்குச் சொந்தமான சாதர் மருத்துவமனை நிர்வாகியான விஷ்வஜீத் சிங், ஓர் ஒப்பந்த ஊழியரின் ஊதிய நிலுவைத்தொகையான ரூ.36,000க்கு ஒப்புதல் அளிக்க ரூ.4,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
அதன் தொடர்பில் அந்த ஊழியர் அளித்த புகார் அடிப்படையில் விஷ்வஜீத் சிங் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர், 15 நாள்கள் நீதிமன்ற காவலில் இருந்தார். பின்னர், கீழ்நீதிமன்றம் அவரை பிணையில் விடுவிக்க அனுமதியளித்தது.
இந்நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட பிணை உத்தரவை எதிர்த்து பாட்னா உயர் நீதிமன்றத்தில் ஒப்பந்த ஊழியர் மேல்முறையீடு செய்தார். அதன்பேரில் கடந்த ஜூலை 1ஆம் தேதி அவரது பிணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
அந்த உத்தரவை எதிர்த்து விஷ்வஜீத் சிங் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அம்மனு மீதான விசாரணைக்கு பிறகு விஷ்வஜீத்துக்கு மீண்டும் பிணை வழங்கியது.
“கைது செய்யப்பட்ட பிறகு அவர் 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் இருந்ததாகத் தெரிகிறது. ஓர் அரசு ஊழியர் கைது செய்யப்பட்டு 48 மணி நேரத்துக்கு மேல் நீதிமன்றக் காவலில் இருந்தால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதாகக் கருதப்படும். அதற்கென தனியாக உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை,” என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே அதே மருத்துவமனையில் அதே பதவியில் அவர் நியமிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், மாநில அரசு இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு சட்டத்துக்குட்பட்டு தேவையானதைச் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
