13 வயதில் ஐஐடி, 24 வயதில் பிஎச்டி: இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த பீகார் இளைஞர்

1 mins read
9dc60afd-0ceb-4eb7-84f3-86a703e3266a
13 வயதில் ஐஐடி, 24 வயதில் பிஎச்டி முடித்த ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த ததகத் அவதார் துளசி. - படம்: நியூஸ் பைட்ஸ்

பீகார்: பீகார் மாநிலத்தின் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த ததகத் அவதார் துளசி என்ற இளைஞர், தனது அபார அறிவாற்றலால் இந்தியக் கல்வித் துறையையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

சிறு வயதிலேயே ஐஐடியில் நுழைந்து, 24 வயதிற்குள் முனைவர் பட்டம் பெற்று சாதனை படைத்த ததகத் அவதார் துளசியின் கல்விப் பயணம் ஓர் அதிசயம். தனது 9 வயதில் பத்தாம் வகுப்பை முடித்து கின்னஸ் சாதனை படைத்தார். பத்தாம் வயதில் பி.எஸ்சி பட்டப்படிப்பை முடித்தார். பன்னிரெண்டு வயதில் எம்.எஸ்சி பட்டத்தையும் வெற்றிகரமாக நிறைவு செய்து சாதனைப் படைத்துள்ளார்.

இவரது அபாரத் திறமையைக் கண்டு வியந்த ஐஐடி பாம்பே, இவரை 13 வயதிலேயே ஆராய்ச்சி மாணவராக ஏற்றுக்கொண்டது. ஐஐடி வரலாற்றிலேயே மிக இளம் வயதில் சேர்க்கப்பட்ட மாணவர் இவரே.

பல சவால்களுக்கு மத்தியிலும் ‘குவாண்டம் கம்ப்யூட்டிங்’ (Quantum Computing) துறையில் தனது 24 வயதிற்குள் முனைவர் பட்டம் முடித்து சாதனை படைத்தார்.

முனைவர் பட்டம் பெற்ற கையோடு, ஐஐடி பாம்பேயிலேயே உதவிப் பேராசிரியராகவும் பணியில் சேர்ந்தார். இதன் மூலம் மிக இளம் வயது பேராசிரியர் என்ற பெருமையையும் பெற்றார்.

ஆரம்ப காலத்தில் இவரது திறமையைச் சிலர் சந்தேகித்தாலும் தனது விடாமுயற்சியாலும் அறிவாற்றலாலும் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, இன்று பலருக்கும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.

குறிப்புச் சொற்கள்