லக்னோ: சிறுநீரக தானம் பெற்று பண மோசடியில் ஈடுபட்ட ஐந்து மருத்துவர்களை உத்தரப் பிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், இந்த மோசடியின் மூளையாகச் செயல்பட்ட ஷிவம் அகர்வால் (32 வயது) என்பவரும் கைதானார்.
கான்பூரில் பல்வேறு தனியார் மருத்துவமனைகளுக்கு இந்த மோசடியில் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் உறுப்பு தானத்துக்குப் பல்வேறு சட்டநடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. நோய்வாய்ப்பட்ட ஒருவர் தனது உறவினர்களிடம் இருந்து உறுப்புதானம் பெற அந்நாட்டுச் சட்டம் அனுமதிக்கிறது.
எனினும், இந்தச் சட்டதிட்டங்களையும் பலரது ஏழ்மையையும் சட்டவிரோதிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர். உறுப்பு நன்கொடையாளர்களிடம் கல்லீரல், சிறுநீரகம் எனப் பல்வேறு உறுப்புகளுக்கு குறைவான தொகையை விலைபேசி, அவற்றைப் பலமடங்கு அதிக தொகைக்கு விற்பனை செய்து லாபம் பார்க்கின்றனர்.
அந்த வகையில், அண்மையில் ஆயுஷ் என்ற எம்பிஏ பட்டதாரியை அணுகியுள்ளார் ஷிவம் அகர்வால். ஆயுஷ் தன் சிறுநீரகத்தைத் தானமாக வழங்கினால் ரூ.10 லட்சம் தருவதாகக் கூறியுள்ளார் ஷிவம்.
இதையடுத்து, கான்பூரில் இந்தத் தனியார் மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
ஆயுஷ்ஷின் சிறுநீரகம் அகற்றப்பட்டு, மீரட்டைச் சேர்ந்த ஃபரூல் தோமர் என்பவருக்குப் பொருத்தப்பட்டது. இதற்காக அவரிடம் ஷிவம் அகர்வால் கும்பல் 60 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளனர்.
இவ்வாறு கொள்ளை லாபம் அடித்த ஷிவம் கும்பல் ஆயுஷ்ஷுக்கு ரூ.3.50 லட்சம் மட்டுமே கொடுத்துள்ளது. தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆயுஷ், காவல்துறையிடம் புகார் அளிக்க, சிறுநீரக மோசடி குறித்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
தன்னை மருத்துவராக வெளிப்படுத்திக்கொண்ட ஷிவல் அகர்வால், வறுமையில் வாடுபவர்களை அடையாளம் கண்டு, அவர்களை அணுகி உடல் உறுப்புகளை குறைந்த விலைக்கு தானமளிக்க ஒப்புக்கொள்ள வைத்துள்ளார். அவருக்கு கான்பூரில் உள்ள மூன்று தனியார் மருத்துவமனைகள் உதவி செய்துள்ளன.
இதையடுத்து, அம்மருத்துவமனைகளின் உரிமையாளர்களான டாக்டர் பிரீத்தி அஹுஜா, அவரது கணவர் டாக்டர் சுர்ஜீத் சிங் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஷிவம் அகர்வாலும் அவரது மோசடிகளுக்குத் துணைபோனவர்களும் 50 முதல் 60 சட்டவிரோத உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளைச் செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்த மோசடிக் கும்பலுக்கு லக்னோ, டெல்லி, மும்பை, கோல்கத்தா மட்டுமல்லாமல், நேப்பாளத்திலும்கூட தொடர்புகள் இருப்பதும் அம்பலமாகி உள்ளது.
கடந்த மார்ச் 3ஆம் தேதிகூட கான்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அவருக்கு சிறுநீரகம் வழங்கியது யார், எவ்வளவு தொகை கைமாறியது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

