நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம்; 30 பேர் கைது

நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம்; 30 பேர் கைது

2 mins read
f556a065-2d4c-4446-90de-2abb02db5535
நீட் தேர்வை நடத்துவதில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, கரப்பான்பூச்சி மக்கள் கட்சி நடத்தி வரும் காலவரையற்ற போராட்டம் டெல்லியில் திங்கட்கிழமை (ஜூன் 22) மூன்றாவது நாளாக நீடித்தது. - படம்: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
Google News Preferred Icon

பாட்னா: நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்த குற்றத்தின் பேரில் 30 பேரை பீகார் காவல்துறை கைது செய்துள்ளது.

இந்த ஆண்டு நடைபெற்ற நீட்தேர்வின்போது வினாத்தாள் கசிந்ததால் தேர்வு ரத்தானது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) மறுதேர்வு நடைபெற்றது. அதில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தேர்வு நடத்தப்பட்டபோதும், பீகாரில் பல மாணவர்கள் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பீகாரின் லகிசராய் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில், உண்மையான மாணவர்களுக்குப் பதிலாக வேறு சிலர் தேர்வு எழுதியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டதில், இதுவரை 30 பேர் கைதாகியுள்ளனர்.

இவர்களில் ஒன்பது பேர் நேரடியாகப் போலி ஆவணங்களைப் பயன்படுத்தித் தேர்வு எழுத முயற்சி செய்துள்ளனர். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி, பிற பள்ளிகளைச் சேர்ந்த ஏழு பேர் பிடிபட்டனர்.

இந்த ஆள்மாறாட்ட மோசடியின் பின்னணியில் 21 இடைத்தரகர்கள் செயல்பட்டதும் அவர்களுக்கு உதவியாளர்கள் இருந்ததும் தெரியவந்துள்ளது. இந்த முறைகேட்டில் மேலும் பல மாணவர்களுக்கும் இடைத்தரகர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இதையடுத்து, பீகாரின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் அதிரடிச் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் ஆண்டுதோறும் எழுதுகின்றனர். இந்த ஆண்டு ஏற்கெனவே ஒரு முறை தேர்வு நடத்தப்பட்டு, அது ரத்து செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு முறைகேடு அரங்கேறியிருப்பது மாணவர்களையும் பெற்றோர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்