கர்ப்பிணியின் வயிற்றில் மருந்துக்குப் பதிலாக தேய்க்கப்பட்ட அமிலம்

1 mins read
3966e75c-ed74-4b25-bb72-d9528c051ad3
இச்சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். - படம்: பிக்சாபே

மும்பை: இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், ஜல்னா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவருக்குப் பிரசவம் பார்க்கப்பட்டபோது அப்பெண்ணின் வயிற்றில் மருந்துக்குப் பதிலாக தவறுதலாக ஹைட்ரோகுளோரிக் அமிலம் தேய்த்துவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் சனிக்கிழமை (ஜூன் 28) தெரிவித்தார்.

போக்கர்டானில் உள்ள அந்த மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் அப்பெண்ணுக்குத் தீக்காயங்கள் ஏற்பட்டதாக அவர் சொன்னார்.

ஷீலா பலேராவ் எனும் அப்பெண், பிரசவத்திற்காக மருத்துவமனைக்குச் சென்றார். பிரசவத்தின்போது பயன்படுத்தப்படும் மருத்துவ ஜெல் என நினைத்து அப்பெண்ணின் வயிற்றில் தாதி ஒருவர் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை தேய்த்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

அப்பெண் தீக்காயங்களால் அவதியுற்றபோதும் ஆரோக்கியமான குழந்தையை ஈன்றெடுத்ததாக அந்த அதிகாரி கூறினார்.

தூய்மைப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் அமிலத்தை மருந்து வைக்கும் தட்டில் தூய்மைப் பணியாளர் ஒருவர் தவறுதலாக வைத்துவிட்டதாக மருத்துவமனை தரப்பு கூறியது.

இச்சம்பவம் குறித்து கருத்துரைத்த மாவட்ட சிவில் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஆர்.எஸ்.படேல், “இது கடுமையான கவனக்குறைவாகும். இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றம் புரிந்தோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்