திருவனந்தபுரம்: கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கேரள மாநிலத்தில் ‘ஹெச்ஐவி’ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக, இளையர் மத்தியில் அண்மைக் காலமாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ‘எய்ட்ஸ்’ கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சங்கங்கள் வெளியிட்ட புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
“கேரளாவில் கடந்த 2024-25ஆம் ஆண்டில் புதிதாகக் கண்டறியப்பட்ட நோயாளிகளில் 14 விழுக்காட்டுப் பேர், 19 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். அங்கு ‘ஹெச்ஐவி’ தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 1,213 பேரில் 197 பேர் இந்த வயது வரம்புக்குள் உள்ளனர்.
“மேலும், பெரும்பாலானோர் திருவனந்தபுரம், பாலக்காடு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்,” என்று ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
கடந்த 2021-2022ஆம் ஆண்டு 76 பேரும் 2022-2023ஆம் ஆண்டு 131 பேரும் 2023-24ஆம் ஆண்டு 181 பேரும் ‘ஹெச்ஐவி’ தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
ஊசிகள் பயன்பாடு, ஊசி கொண்டு பச்சை குத்தும் வழக்கம், பாதுகாப்பற்ற உடலுறவு ஆகியவைதான் தொற்றுக்கு முக்கியக் காரணிகளாக உள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறின.
இதையடுத்து, தொற்றுப் பரவலையும் நோயாளிகளின் எண்ணிக்கையையும் குறைக்க ஏதுவாக கல்வி நிலையங்களில் விழிப்புணர்வுப் பிரசார நடவடிக்கைககளை முடுக்கிவிட வேண்டும் என கேரள சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.