புதுடெல்லி: அமெரிக்க வரி விதிப்பால் வணிகம் பாதிக்கப்பட்டாலும் இந்திய ஆடை ஏற்றுமதி அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த நான்கு மாதங்களாக இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கான ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி நடவடிக்கைகள் மந்தமாக இருந்தாலும், மாதாந்தர ஏற்றுமதி அதிக பாதிப்பின்றி மிதமான வளர்ச்சி கண்டுள்ளதாக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு மன்றத்தின் தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
கடந்த 2025 டிசம்பர் மாதத்தில் இந்திய ஆடைகளின் ஏற்றுமதி மதிப்பு ரூ.13,550 கோடியாகப் பதிவாகியுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இது ரூ.12,427 கோடியாகப் பதிவாகியிருந்தது. ஒப்பீட்டளவில் ஏற்றுமதி விகிதம் 9.07% அதிகரித்துள்ளது.
கடந்த நிதியாண்டில், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் ரூ.94,940 கோடி மதிப்பிலான ஆடை ஏற்றுமதி செய்யப்பட்டது.
நடப்பு நிதியாண்டில் அந்த மதிப்பானது ஒரு லட்சம் கோடி ரூபாயைக் கடந்துள்ளது என்றும் இது ஒப்பீட்டளவில் 6.5% அதிகம் என்றும் திரு சக்திவேல் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்க வரி விதிப்பால் வணிக பாதிப்பு இருந்தாலும், ஆயத்த ஆடை ஏற்றுமதி ஓரளவு வளர்ச்சி கண்டுள்ளது என்றும் அவர் கூறினா.
மொத்தத்தில் கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாத காலத்தில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி முந்திய ஆண்டைக் காட்டிலும் 1.6% மட்டுமே குறைந்துள்ளது என்றும் திரு சக்திவேல் மேலும் தெரிவித்தார்.

