புதுடெல்லி: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்துவரும் சிறுநீரக நோய் குறித்து அந்நாட்டின் நாடாளுமன்றக் குழு கவலை தெரிவித்துள்ளது.
தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கிராமப்புற மக்கள், விவசாயிகள் இடையே காரணம் அறியப்படாத நாள்பட்ட சிறுநீரக நோய் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதாக அறிக்கைவழி அக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இந்தப் பாதிப்பு குறித்து விரிவாக ஆராயவும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளவும் இந்திய அரசுக்கு அதன் நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.
நாடு முழுவதும் 15 மாநிலங்களில் நோய் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சிறுநீரகப் பாதிப்பு அதிகமாக இருப்பது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சமாஜ்வாடி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கோபால் யாதவ் தலைமையில் இயங்கி வரும் சுகாதாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழு அந்த அறிக்கையை தயாரித்துள்ளது.
பொதுவாக நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவைதான் சிறுநீரகப் பாதிப்புக்கான காரணிகளாகக் கருதப்படுகின்றன.
மேலும் அதிக வெப்பம், தொடர் நீர்சத்துக் குறைபாடு, பூச்சிக்கொல்லி மருந்துகள், அசுத்தமான குடிநீர் ஆகியவையும் மற்ற காரணிகளாக கண்டறியப்பட்டுள்ளன.
இந்தியாவில் உள்ள கிராமப்புறப் பகுதிகளில் ஏறக்குறைய 18 முதல் 20 விழுக்காடு மக்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பருவநிலை மாற்றத்துக்கும் நோய்ப்பாதிப்புக்கும் இடையே எதேனும் தொடர்ந்து உள்ளதா என்பது குறித்து ஆராய வேண்டும் என நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியுள்ளது.
மேலும் எந்தவொரு முந்தைய உடல்நலப் பாதிப்பும் இல்லாத குறைந்த வருவாய் கொண்ட இளம் விவசாயத் தொழிலாளர்களையும் கடின உழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்களையும் சிறுநீரக நோய் அதிகம் தாக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


