50 ஆயிரம் வீரர்களைக் குவித்த சீனா; நிலப்பரப்பை காக்க இந்திய ராணுவத்துக்கு உத்தரவு

50 ஆயிரம் வீரர்களைக் குவித்த சீனா; நிலப்பரப்பை காக்க இந்திய ராணுவத்துக்கு உத்தரவு

2 mins read
c51bd90c-0988-41dc-999f-3268d0dd3adc
ரஃபேல் போர் விமானங்களை இந்திய விமானப்படையில் முறைப்படி இணைக்கும் நிகழ்வில் இந்திய, பிரான்ஸ் தற்காப்பு அமைச்சர்களான ராஜ்நாத் சிங்கும் ஃப்ளோரன்ஸ் பார்லியும் பங்கேற்றனர். படம்: ஏஎஃப்பி -

என்ன விலை கொடுத்தேனும் நாட்டின் நிலப்பரப்பைப் பாதுகாக்க வேண்டும் என இந்திய ராணுவத்துக்கும் அதன் தளபதிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

இந்நிலையில் இந்திய, சீன எல்லைப் பகுதியில் இருதரப்பும் படைகளைக் குவித்து வருகின்றன.

எல்லையின் குறிப்பிட்ட சில பகுதிகளில் இரு தரப்புகளுக்கும் இடையே வெறும் இருநூறு மீட்டர் இடைவெளிதான் உள்ளது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே மாஸ்கோவில் இந்திய-சீன வெளியுறவு அமைச்சர்கள் இன்று சந்தித்துப் பேசினர்.

அப்போது எல்லை நிலவரம் தொடர்பில் விரிவாகப் பேசப்பட்டதாகவும் இதையடுத்து எல்லைப் பதற்றம் அடுத்து வரும் நாட்களில் ஓரளவு தணியும் என்றும் கூறப்படுகிறது.

கிழக்கு லடாக் பகுதியில் இருதரப்பும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சூழல் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அசல் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அமைந்துள்ள பாங்கோங் சோ ஏரி பகுதியை இந்திய ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.

ராணுவம் மற்றும் தூதரகப் பேச்சுவார்த்தைகள் ஒருபக்கம் நடைபெற்று வந்தாலும் சீன ராணுவம் சுமார் 50 ஆயிரம் வீரர்கள் மற்றும் பீரங்கிகளை எல்லையில் நிறுத்தி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய ராணுவ நிலைகளுக்கு மிக அருகில் காலாட்படை, போர் வாகனங்களையும் வரிசையாக நிறுத்தி வைத்துள்ளது என்றும் ஏராளமான கனரக ஆயுதங்களைக் குவித்திருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையே பாங்கோங் சோ ஏரிக்கு அருகே உள்ள மேலும் பல உயரமான பகுதிகளை இந்திய ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

பாங்கோங் சோவின் வடக்கு மற்றும் தெற்குக் கரைகளில் இந்திய வீரர்களின் ஆதிக்கம் நிலவுகிறது.

இதற்கிடையே பிரான்ஸ் தயாரிப்பான 'ரஃபேல்' போர் விமானங்கள் இந்திய விமானப் படையில் இன்று முறைப்படி இணைக்கப்பட்டன. இதனால் விமானப் படையின் பலம் மேலும் அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்