புதுடெல்லி: இந்தியாவில் ஒன்பது பேரில் ஒருவர் தங்களின் வாழ்நாளில் புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும் அந்நாட்டில் புதிதாக 15.33 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர்.
இதனைக் கருத்தில்கொண்டு, புற்றுநோய்ப் பரிசோதனை, செலவு குறைந்த சிகிச்சை, பராமரிப்பு தொடர்பில் பொதுமக்களிடமிருந்தும் வல்லுநர்களிடமிருந்தும் இந்திய மாநிலங்களவைக் குழு ஆலோசனைகளை வரவேற்றுள்ளது.
இவ்விவகாரம் குறித்து சமாஜ்வாடி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ராம் கோபால் யாதவ் தலைமையிலான சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு விரிவாக ஆராய்ந்து வருவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தெரிவிக்கிறது.
புற்றுநோய் மருத்துவத் துறை வேகமாக வளர்ந்து வந்தாலும், அதிநவீன சிகிச்சைகள் ஏழை எளிய மக்களைச் சென்றடைவதில் இன்னும் பெருஞ்சவால்கள் நீடிக்கின்றன.
மக்களுக்குப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு இல்லாததே அந்நோய் மூன்றாம், நான்காம் கட்டங்களை எட்டிய பிறகு கண்டறியப்படுவதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
இவ்வாறு காலதாமதமாக நோய் கண்டறியப்படுவதே புற்றுநோயால் ஏற்படும் மரணம் அதிகரிப்பதற்குக் காரணமாக அமைகிறது என்று சர் கங்கா ராம் மருத்துவமனையின் பேராசிரியர் சிந்தாமணி குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தொடக்க நிலையிலேயே புற்றுநோயைக் கண்டறிந்து, மருத்துவச் செலவைக் குறைப்பதற்கான வழிமுறைகளைத் திரட்ட நாடாளுமன்ற நிலைக்குழு நோக்கம் கொண்டுள்ளது.
“புற்றுநோய் சிகிச்சைக்கான செலவு கவலையளிப்பதாக உள்ளது. அதனால் பாதிக்கப்பட்ட பலர்க்கும் அச்சிகிச்சை கட்டுப்படியானதாக இல்லை. எனவே, நாடாளுமன்றத்தில் தகுந்த பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கு முன்பாக, செலவு குறைந்த சிகிச்சைக்கான கருத்துகளைத் திரட்டி வருகிறோம்,” என்று கௌதம புத்தா நகர்த் தொகுதி எம்.பி.யும் குழுவின் உறுப்பினருமான டாக்டர் மகேஷ் சர்மா தெரிவித்தார்.
அதன் தொடர்பில் ஆலோசனைகளை வழங்க வல்லுநர்களுக்கு 15 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஆலோசனைகள் இந்திய மக்களின் புற்றுநோய்ச் சுமையைக் குறைக்கப் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

