மும்பை: இந்தியாவின் மத்திய வங்கி, வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்ட 168 டன் தங்கத்தை மீட்டுள்ளது.
ரஷ்யா - உக்ரேன் போர் மூண்ட பிறகு ரஷ்யாவின் டாலர் கையிருப்பை அமெரிக்கா முடக்கியது.
இதையடுத்து, வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்ட தங்கத்தை தாயகம் கொண்டு வரும் முயற்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ரிசர்வ் வங்கி ஈடுபட்டது.
இதன்படி, கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட தரவுகளின்படி 2025-26 இடையே பேங்க் ஆஃப் இங்கிலாந்து மற்றும் பேங்க் ஃபார் இன்டர்நேஷனல் செட்டில்மென்ட்ஸ் ஆகியவற்றில் வைக்கப்பட்டிருந்த 104.23 டன் தங்கத்தை ரிசர்வ் வங்கி இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளது. முன்னதாக ஆண்டின் முதல் பாதியில் 63.83 டன் தங்கம் கொண்டு வரப்பட்டது.
ஒட்டுமொத்தமாக, 2025-26 நிதியாண்டில் ரிசர்வ் வங்கி 168.06 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளது.
இதற்கு முன்பு 2023-24ல் 107.21 டன் தங்கமும் 2024-25ல் 103.68 டன் தங்கமும் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டது.
ரிசர்வ் வங்கியின் மொத்த தங்கக் கையிருப்பு 880.52 டன். இதன் மதிப்பு ஏப்ரல் 17 நிலவரப்படி 122 பில்லியன் டாலர் ஆகும். இதில் இப்போதைய நிலவரப்படி 77 விழுக்காடு தங்கம் இந்தியாவில் வைக்கப்பட்டுள்ளது. மார்ச் 2023ல் இது வெறும் 38 விழுக்காடாக மட்டுமே இருந்தது. எஞ்சிய 23 விழுக்காடு தங்கம் மட்டுமே வெளிநாட்டில் உள்ளது.

