காசநோய் இறப்பு விகிதத்தைக் குறைத்து இந்தியா சாதனை

காசநோய் இறப்பு விகிதத்தைக் குறைத்து இந்தியா சாதனை

https://newsonair.gov.in/india-achieves-significant-milestone-in-its-fight-against-tb-records-38-decline-in-tb-mortality-and-94-treatment-success-rate/
கோப்புப்படம்: இந்துஸ்தான் டைம்ஸ்

13 Nov 2026 - 4:46 pm

1 mins read

புதுடெல்லி: காசநோய்க்கு எதிரான போரில் இந்தியா முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அந்நாட்டில் காசநோய் இறப்பு விகிதம் 38 விழுக்காடு குறைந்துள்ளது.

இது உலக அளவிலான 35 விழுக்காடு குறைப்பைவிட அதிகம். நோயை ஒழிப்பதற்கான இந்தியாவின் தொடர்ச்சியான முயற்சிகளை இது வெளிப்படுத்துகிறது.

காசநோய் தொடர்பான உயிரிழப்புகளைக் குறைப்பதில் இந்தியாவின் வலுவான செயல்பாட்டை இது எடுத்துக்காட்டுவதாகக் கூறப்படுகிறது.

உலகச் சுகாதார நிறுவனம் வியாழக்கிழமை (நவம்பர் 12) வெளியிட்ட 2026ஆம் ஆண்டுக்கான உலகளாவிய காசநோய் அறிக்கையின்படி, காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான சிகிச்சையில் இந்தியா 94 விழுக்காடு வெற்றி விகிதத்தைப் பெற்றுள்ளது.

தேசியக் காசநோய் ஒழிப்புத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கைகளின் தாக்கத்தையே இந்த முன்னேற்றம் காட்டுவதாக அந்நாட்டுச் சுகாதார, குடும்ப நல அமைச்சு கூறியது.

நோயாளிகளை முன்கூட்டியே கண்டறிதல், செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கூடிய ஊடுகதிர்ச் சோதனை, விரைவான நோய் கண்டறிதல், உடனடி சிகிச்சைத் தொடக்கம், மேம்படுத்தப்பட்ட காசநோய்ப் பராமரிப்பு, சத்துணவு ஆதரவு ஆகியவை அதில் அடங்கும்.

‘காசநோய் இல்லாத இந்தியா’ இயக்கத்தின்கீழ் 250 மில்லியனுக்கும் அதிகமானோர் தீவிரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

முன்கூட்டியே பரிசோதனை, தொழில்நுட்பம் சார்ந்த நோய் கண்டறிதல், சமூக ஈடுபாடு ஆகியவற்றின் மூலம் அந்நாட்டின் விரைவான காசநோய் ஒழிப்பு முயற்சிகளுக்கு இந்த இயக்கம் முக்கிய உந்துசக்தியாக உருவெடுத்துள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்