இந்தியா: தொலைக்காட்சியில் விளம்பரம் செய்வது தொடர்ந்து சரிவு

இந்தியா: தொலைக்காட்சியில் விளம்பரம் செய்வது தொடர்ந்து சரிவு

2 mins read
6ba313d6-870f-4e6f-89e3-5d0078495e15
தொலைக்காட்சி ஒளிவழிகளில் ஒரு மணி நேரத்திற்கு 12 நிமிடங்கள் மட்டுமே விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டும் என்ற வரம்பை இந்திய அரசு நீக்கியுள்ளது. - மாதிரிப்படம்: பிக்சாபே
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஏழு மாதங்களைவிட இவ்வாண்டின் அதே காலகட்டத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட விளம்பரங்களின் அளவு ஏழு விழுக்காடு சரிவுகண்டது.

‘டேம் ஆட்எக்ஸ்’ (TAM AdEx) வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் பதிவான ஒன்பது விழுக்காட்டுச் சரிவைவிட இது குறைவு என்பதால், சரிவின் வேகம் சற்றே மெதுவாகியுள்ளது.

மொத்த விளம்பரங்களில் உணவு, பானத் துறை 23 விழுக்காட்டுப் பங்களிப்புடன் முதலிடத்திலும், சேவைத் துறை 16 விழுக்காட்டுடன் இரண்டாம் இடத்திலும் இருந்தன. முன்னணியில் இருக்கும் பத்துத் துறைகள் மொத்த விளம்பர அளவில் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டிற்குக் காரணமாக இருந்தன.

சந்தையில் தொய்விருந்தாலும் 150க்கும் அதிகமான பிரிவுகள் வளர்ச்சி கண்டுள்ளன. இதில் மின்னிலக்கச் சேவைகள் 10.2 மடங்கும் பிஸ்கட் உணவுப்பொருள் 2.1 மடங்கும் வளர்ச்சி கண்டன.

விளம்பரம் செய்வதில் ரெக்கிட் (Reckitt), இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனங்கள் முன்னணியில் இருந்தன. அதிக அளவில் விளம்பரம் செய்யப்பட்ட வணிகச் சின்னங்களில் ரெக்கிட் நிறுவனத்தின் பொருள்கள் முன்னணியில் இருந்தன.

விளம்பரதாரர்களின் விருப்பமான ஒளிவழிகளைப் பொறுத்தமட்டில், பொழுதுபோக்கு அலைவரிசைகள் 30 விழுக்காட்டுப் பங்கையும் செய்தி அலைவரிசைகள் 25 விழுக்காட்டுப் பங்கையும் பெற்றன.

12 நிமிட விளம்பர வரம்பு நீக்கம்

இதனிடையே, தொலைக்காட்சி ஒளிவழிகளில் ஒரு மணி நேரத்திற்கு 12 நிமிடங்கள் மட்டுமே விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டும் என்ற வரம்பை இந்திய அரசு நீக்கியுள்ளது.

இதுதொடர்பான கம்பிவடத் தொலைக்காட்சிக் கட்டமைப்பு (திருத்தம்) விதிகளைத் தகவல், ஒளிபரப்பு அமைச்சு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) அரசிதழில் வெளியிட்டது.

கடந்த 2006ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அந்த விதி, தற்போதைய மின்னிலக்கச் சூழல், கடுமையான போட்டி போன்றவற்றைக் கருத்தில்கொண்டு நீக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்