புதுடெல்லி: உலகின் மின்னணு மையமாக இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ் இதனைத் தெரிவித்தார்.
‘செமிகான் இந்தியா 2.0’ திட்டத்திற்கான இணையவழி விண்ணப்பத் தளத்தை தொடங்கிவைத்து அவர் பேசினார்.
“மின்னணுப் பொருள்களின் உற்பத்தி, வெறும் உதிரிபாகங்களை இணைக்கும் நிலையை இந்தியா கடந்து பாகங்கள், மூலப்பொருள்கள், நவீனத் தொழில்நுட்பங்கள் அடங்கிய முழுமையான உள்நாட்டு உற்பத்திச் சங்கிலியாக வளர்ந்து வருகிறது. இது கடந்த 10 ஆண்டுகளில் மின்னணுத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம், அரசும் தொழில்துறையும் இணைந்து மேற்கொண்ட கூட்டு முயற்சியின் வெற்றியை காட்டுகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.
மத்திய அரசு, பல்வேறு உத்திபூர்வ முன்முயற்சிகள், கொள்கை தலையீடுகள் மூலம் நாட்டில் வலுவான, மீள்திறன் கொண்ட பகுதி மின்கடத்தி சூழல் அமைப்பை உருவாக்க ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மின்கலன்கள், சர்க்யூட் போர்டுகள் உள்ளிட்டவற்றின் உற்பத்தித் திறன் அதிகரித்து வருவதாகவும் அரசின் திட்டங்கள் உள்நாட்டு விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவதோடு குறு, சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட அலகுகளில் கிட்டத்தட்ட 50 விழுக்காடு குறு, சிறு, நடுத்தர தொழில் துறையைச் சேர்ந்தவை.
செமிகான் இந்தியா 2.0’ திட்டம், குறிப்பாக உபகரணங்கள், மூலப்பொருள்கள், வேதிப்பொருள்கள் சார்ந்த வலுவான பகுதி மின்கடத்தி சூழலை உருவாக்குவதில் கவனம் செலுத்தும். இதற்காக குறைந்தது மூன்று பெரிய உபகரண உற்பத்தியாளர்களையும் ஐந்து வேதிப்பொருள் நிறுவனங்களையும் இந்தியாவிற்கு ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திட்டங்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர், ‘சுயசார்பு இந்தியா’ தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப தரம், நவீனத் தொழில்நுட்பம், ஆய்வு, அனைத்துலகப் போட்டித்திறன் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மின்னணுப் பாகங்கள் உற்பத்தித் திட்டத்தின் கீழ் புதிதாக 12 நிறுவனங்களின் திட்டங்களுக்கு இன்று வரை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.7,503 கோடி முதலீடு செய்யப்படுவதுடன், ரூ.39,045 கோடி மதிப்பிலான பொருள்கள் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் 7,127 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்கள் தமிழ்நாடு உட்பட ஏழு மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளன. இதுவரை 16 மாநிலங்களில் 34 வகையான பொருள்களை உற்பத்தி செய்ய 118 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த முதலீடு ரூ.77,051 கோடியாகும். இதன்மூலம் இறக்குமதிச் சார்பு குறைந்து, உள்நாட்டு உற்பத்தி வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
