புதுடெல்லி: இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக தலைநகர் டெல்லியில் நடத்தப்பட்ட மாதிரி நாடாளுமன்றக் கூட்டத்தில் ‘இண்டியா’ கூட்டணித் தலைவர்கள் அவரைக் கடுமையாக விமர்சித்தனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் நடைபெற்ற அந்நிகழ்வில், முன்னாள் மக்களவை நாயகர் மீரா குமார் தலைமை தாங்கினார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘இண்டியா’ கூட்டணியின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் அதில் கலந்துகொண்டனர்.
அப்போது, தலைமைத் தேர்தல் ஆணையர்மீது ஆறு முக்கியக் குற்றச்சாட்டுகளை மல்லிகார்ஜுன கார்கே முன்வைத்தார்.
வாக்குத் திருட்டுக்கு வழிவகுத்தது, நாடாளுமன்ற ஒப்புதலின்றி ‘படிவம்-6’ல் மாற்றங்களைச் செய்தது, வாக்காளர் பட்டியலிலிருந்து ஏறக்குறைய 132 மில்லியன் வாக்காளர்களின் பெயர்களை நீக்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவற்றுள் அடங்கும்.
நிகழ்வில் உரையாற்றிய ராகுல் காந்தி, வாக்காளர் பட்டியலிலிருந்து லட்சக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்டதன்மூலம் கடந்த 2024ஆம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளதாகத் தேர்தல் ஆணையத்தைச் சாடினார்.
நாடாளுமன்றத்திலும் பிற அமைப்புகளிலும் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுவதால்தான் இதுபோன்ற மக்கள் மன்ற விசாரணையை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாகக் கூட்டணித் தலைவர்கள் தெரிவித்தனர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை விடப்போவதில்லை என்றும் அவர்மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியலமைப்பையும் மக்களின் ஜனநாயக உரிமைகளையும் காக்க ‘இண்டியா’ கூட்டணி இறுதிவரை போராடும் என அவர் உறுதியளித்தார்.
இதனிடையே, எதிர்க்கட்சிகளின் இந்த நடவடிக்கைக்குப் ஆளுங்கட்சியான பாஜக கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.
‘இண்டியா’ கூட்டணி நாட்டின் அரசியல்சாசன அமைப்புகளைக் கேலிக்கூத்தாக்கி வருவதாக பாஜக மூத்த தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.
