புதுடெல்லி: ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலின்போது அதை முறியடிக்க ரஷ்யத் தயாரிப்பான ‘எஸ்-400’ வகை ஏவுகணை அமைப்பு இந்திய ராணுவத்துக்கு பெரிதும் கைகொடுத்தது.
இந்நிலையில் ரூ.10,000 கோடி மதிப்புள்ள ‘எஸ்-400’ ரக ஏவுகணை அமைப்புகளை ரஷ்யாவிடம் இருந்து வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் போர் விமானங்கள், உளவு விமானங்கள், ஆளில்லா சிறிய ரக வானூர்திகளை (டிரோன்) வீழ்த்த ‘எஸ்-400’ ஏவுகணை அமைப்பையே இந்திய ராணுவம் பெரிதும் சார்ந்திருந்தது.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் பகுதியில் விமான, ரேடார் நிலைகள் அமைக்கப்பட்டு இருந்ததை இந்தியா ஏற்கெனவே கண்டறிந்திருந்தது.
இந்திய எல்லையில் இருந்து ஏறக்குறைய 300 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த அந்த நிலைகள் மீது ‘எஸ்-400’ அமைப்பின் உதவியோடு துல்லியமான தாக்குதலை நடத்தியது இந்திய ராணுவம்.
இது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆதம்பூர், புஜ் ஆகிய பகுதிகளில் இந்தியா நிறுவியிருந்த எஸ் 400 அமைப்புகளால் அச்சமடைந்த பாகிஸ்தான் விமானப்படை, கடந்த ஆண்டு மே மாதம் முற்றிலும் பின் வாங்கியது.
இந்நிலையில், இந்திய ராணுவத்துக்குப் பெரும் பலம் சேர்த்துள்ள ‘எஸ்-400’ ஏவுகணை அமைப்பை அதிக அளவில் வாங்க தற்காப்பு அமைச்சு ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிப்ரவரி 12ஆம் தேதி டெல்லியில் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் கூடிய பாதுகாப்பு கொள்முதல் மன்ற கூட்டத்தில் ரூ.3.60 லட்சம் கோடிக்கு ஏவுகணைகள், ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதில் ரூ.10,000 கோடி ஒதுக்கீட்டில் 288 ‘எஸ்-‘400’ ஏவுகணைகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நடப்பாண்டு ஜூன், நவம்பர் மாதங்களில் ஏற்கெனவே இந்தியாவுக்கு உறுதி அளித்தபடி இந்தியாவுக்கு இரண்டு ‘எஸ் 400’ ஏவுகணை அமைப்புகளை ரஷ்யா அனுப்ப உள்ளது.
இதனிடையே, பிரான்சிடம் இருந்து 114 ரஃபேல் விமானங்களை வாங்கவும் இந்தியா முடிவு செய்துள்ளது.

