புதுடெல்லி: பாஸ்மதி தவிர்த்த வெள்ளை அரிசியின் ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கு இந்தியா சனிக்கிழமை அனுமதி அளித்துள்ளது.
அந்நாட்டின் விவசாயிகள் வரவிருக்கும் வாரங்களில் புதுநெல்லை அறுவடை செய்யத் தயாராகி வரும்நிலையில், உலகின் ஆகப் பெரிய அரிசி ஏற்றுமதியாளரான இந்தியா வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு விதித்திருந்த தடையை அகற்றியுள்ளது.
அதிகளவிலான இந்தியாவின் அரிசி ஏற்றுமதி ஒட்டுமொத்த உலக விநியோகத்தை மேம்படுத்துவதுடன் அனைத்துலக அளவில் அரிசி விலையைத் தணிக்கும். அத்துடன், பாகிஸ்தான், தாய்லாந்து, வியட்னாம் போன்ற முக்கிய அரிசி ஏற்றுமதியாளர்கள் விலையைக் குறைக்கும் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
புதுடெல்லி பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு $490 என விலை நிர்ணயித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வெள்ளை அரிசிக்கான ஏற்றுமதி வரியை அரசாங்கம் நீக்கிய ஒரு நாளுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
உயர்ரக (பிரீமியம்), நறுமண பாஸ்மதி அரசி வகைகள், புழுங்கல் அரிசி வகைகளுக்கான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை விற்பனை செய்ய வர்த்தகர்களை அனுமதிக்கும் முடிவை இந்தியா எடுத்துள்ளது. வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) புழுங்கல் அரிசிக்கான ஏற்றுமதி வரியை இந்தியா 20%லிருந்து 10% ஆகக் குறைத்தது.
ஐரோப்பா, மத்திய கிழக்கு, அமெரிக்கா போன்ற லாபகரமான வெளிநாட்டு சந்தைகளை நாட முடியவில்லை என்று புகார் கூறிய ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு உதவும் வகையில், இந்த மாதத் தொடக்கத்தில் அரசாங்கம் பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது.
எல்நினோ வானிலை மாற்றங்கள் காரணமாக மோசமான பருவமழை அச்சத்தை எழுப்பியதால், இந்தியா கடந்த ஆண்டு அரிசி ஏற்றுமதியில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. ஏப்ரல்-ஜூன் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக உள்ளூர் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க கட்டுப்பாடுகளை 2024 வரை நீட்டித்தது.
2023ஆம் ஆண்டு ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதிலிருந்து, உள்ளூர் விநியோகம் அதிகரித்து, அரசாங்கக் கிடங்குகளில் இருப்பு அதிகரித்தன. அரசு நடத்தும் இந்திய உணவு கூட்டுறவுச் சங்கத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி அரிசி கையிருப்பு 32.3 மில்லியன் மெட்ரிக் டன்களாக இருந்தது, இது கடந்த ஆண்டைவிட 38.6% அதிகம். இது அரிசி ஏற்றுமதித் தடைகளை விலக்க அரசாங்கத்திற்குக் கைகொடுக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
பொய்க்காத பருவமழையால், விவசாயிகள் 41.35 மில்லியன் ஹெக்டரில் (102.18 மில்லியன் ஏக்கர்) நெல் பயிரிட்டுள்ளனர். இது கடந்த ஆண்டில் 40.45 மில்லியன் ஹெக்டராகவும் (99.95 மில்லியன் ஏக்கர்), கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக 40.1 மில்லியன் ஹெக்டராகவும் (99.09 மில்லியன் ஏக்கர்) இருந்தது.
பாஸ்மதி தவிர்த்த அரிசி ஏற்றுமதியை அனுமதிக்கும் முடிவு கிராமப்புறங்களில் விவசாய வருமானத்தை உயர்த்துவதுடன் உலகச் சந்தையில் இந்தியா தனது இடத்தை மீண்டும் நிலைநிறுத்த உதவும் என்று புதுடெல்லியைச் சேர்ந்த வர்த்தகர் ராஜேஷ் பஹாரியா ஜெயின் கூறினார்.
புழுங்கல் அரிசிக்கு 10% ஏற்றுமதி வரி விதித்தாலும், அடிநிலை விலை மெட்ரிக் டன் யுஎஸ் 490 டாலராக இருந்தாலும், அனைத்துலகச் சந்தையில் இந்திய வெள்ளை அரிசி போட்டியாக இருக்கும் என அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் பி.வி.கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.