புதுடெல்லி: இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து மிக விரைவில் விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ள ‘நிசார்’ (NISAR) செயற்கைக்கோள், இருதரப்பு விண்வெளி ஆய்வுகளை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் இஸ்ரோவும் அமெரிக்காவின் நாசாவும் இணைந்து உருவாக்கியுள்ள ‘நிசார்’, 12 நாள்களில் ஒட்டுமொத்த பூமியையும் ஆய்வுக்கு உட்படுத்தி, பல்வேறு தகவல்களை அளிக்கும் எனக் கூறப்படுகிறது.
பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக்கூட துல்லியமாக அளவிடும் என்று நிபுணர்கள் கூறினர்.
‘நிசார்’ அளிக்கும் தகவல்கள், உலகளவில் நடைபெற்று வரும் புவி அறிவியல் ஆய்வுகளில் பல திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன ரேடார் இமேஜிங் கருவிகள் ஆய்வுக்குத் தேவைப்படும் அனைத்து தகவல்களையும் துல்லியமாக அளிக்கும்.
பூமியின் மேற்பரப்பை மேகங்கள், இருள் சூழ்ந்தாலும்கூட, அவற்றில் ஊடுருவிச் சென்று, தனது ரேடார் சமிக்ஞைகள்மூலம் படங்களை எடுக்கும் திறன் கொண்டது இந்தச் செயற்கைக்கோள்
“பூமியை ஒரு குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் சுற்றி வரும்போது, ஒவ்வொரு 12 நாள்களுக்கும் ஒருமுறை ஒரே பகுதியைக் கடந்து செல்லும் வகையில் ‘நிசார்’ வடிவமைக்கப்பட்டுள்ளது.
“இதன் மூலம், குறிப்பிட்ட இடைவெளிகளில் பூமியின் நிலப்பரப்பில் ஏற்படும் மாற்றங்களை மீண்டும் மீண்டும் படம் எடுத்து, தரவுகளைச் சேகரிக்கும்,” என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
பூமியின் சுற்றுச்சூழல் மாற்றங்கள், இயற்கை பேரழிவுகள், பனிப்பாறை உருகுதல், நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள், விவசாயப் பகுதிகள் குறித்த முக்கியத் தகவல்களை வழங்கும் திறன் பெற்றிருப்பதால், நிசார் செயற்கைக்கோள் எப்போது விண்ணில் ஏவப்படும் என உலக நாடுகள் ஆவலுடன் காத்திருக்கின்றன.
‘நிசார்’ திட்டம், விண்வெளித் துறையில் இந்தியா, அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பை வெளிப்படுத்தும் மற்றொரு மைல்கல்லாகவும் பார்க்கப்படுகிறது.