புதுடெல்லி: விண்வெளிக்கும் வேற்று கிரகத்திற்கும் மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் எதிர்கால முயற்சிகளுக்கு உதவும் வகையில், அங்குள்ள தட்பவெப்ப நிலைகள், தொழில்நுட்ப சவால்கள் ஆகியவற்றைச் சமாளிப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய, முதல் ‘அனலாக்’ சோதனை முயற்சியை லடாக்கின் லே பகுதியில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நவம்பர் 1ஆம் தேதி தொடங்கியது.
ஹப்-1 எனப்படும் பூமிக்கு அப்பாற்பட்ட ஒரு கிரக வாழ்விடத்தில் வாழ்க்கையை உருவகப்படுத்தும் அமைப்பு லடாக்கின் லே நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சந்திரன், செவ்வாய் மற்றும் பிற கிரகங்களுக்கு நீண்ட கால விண்வெளி பயணங்களை இந்தியா திட்டமிட்டுள்ளதால், எதிர்கால விண்வெளி வீரர்கள் வேற்று கிரக பயணங்களில் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொள்ள புதிய பணி உதவும் என்று கூறப்படுகிறது.
செவ்வாய் மற்றும் சந்திரனின் நிலப்பரப்புகளை ஒத்திருக்கும் தனித்துவமான புவியியல் அம்சங்கள் காரணமாக இந்த ஆய்வுக்கு லடாக் தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மனித விண்வெளிப் பயண மையம் (Human Spaceflight Centre), இஸ்ரோ, விண்வெளி சூழல்களை செயற்கையாக உருவாக்கும் தனியார் கட்டடக்கலை நிறுவனமான ஆக்கா ஸ்பேஸ் ஸ்டூடியோ, லடாக் பல்கலைக் கழகம், மும்பை ஐ.ஐ.டி., ஆகியவை இணைந்து லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு மன்றத்தின் உதவியுடன் இந்த சோதனையை நடத்துகின்றன.
இதன் வாயிலாக கிடைக்கும் தரவுகளை வைத்து, இஸ்ரோவின் எதிர்கால விண்வெளி திட்டத்தில் உள்ள சவால்கள், சிக்கல்கள் ஆகியவற்றைஅறிவியலாளர்கள் புரிந்துகொண்டு அதற்கேற்ப திட்டங்களை வகுக்க உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.