மும்பை: இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ள பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மருடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (அக்டோபர் 9) மும்பையில் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.
இரு தலைவர்களும் வர்த்தகம், தற்காப்பு, முக்கியத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்திப்பின்போது, கூட்டுப் பொருளியல் மற்றும் வர்த்தகக் குழுவை மறுசீரமைப்பதற்கு இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
கடந்த ஜூலை மாதம் இந்தியா, பிரிட்டன் இடையே விரிவான பொருளியல், வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் மூலம், உருவாகியுள்ள வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் பிரதமர் ஸ்டார்மர், நூறு தொழில்முனைவோர், கலாசாரப் பிரதிநிதிகள், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் அடங்கிய குழுவுடன் இரண்டு நாள் பயணமாக மும்பைக்குப் பயணமானார்.
இந்தியா-பிரிட்டன் இடையேயான ஒப்பந்தத்தால் இளையர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று திரு கியர் ஸ்டார்மருடனான சந்திப்புக்குப் பின்னர் பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“மேலும், இருதரப்பு ஒப்பந்தம், வர்த்தக விரிவாக்கம், தொழில்கள், நுகர்வோர் என அனைத்துத் தரப்புக்கும் பயனளிக்கும்.
“எங்கள் பேச்சுவார்த்தைகளில் முக்கியமாகத் தொழில்நுட்பம், பாதுகாப்பு, ஏஐ, நிலையான மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவையும் இடம்பெற்றன,” என்றும் திரு மோடி கூறினார்.
“பிரதமர் கியர் ஸ்டார்மரின் தலைமையின் கீழ், இந்தியா - இங்கிலாந்து இடையேயான உறவுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில மாதங்களில், இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வணிகக் குழுவுடன் நீங்கள் இந்தியாவுக்கு வருகை தந்திருப்பது, இரு நாடுகளின் கூட்டாண்மை வெளிப்படுத்தும் புதிய வீரியத்தின் அடையாளம்.
தொடர்புடைய செய்திகள்
“இந்தியாவும் இங்கிலாந்தும் இயல்பிலேயே பங்காளிகள். ஜனநாயகம், சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி போன்ற மதிப்புகளில் உள்ள பரஸ்பர நம்பிக்கை நமது உறவுகளுக்கு அடித்தளமாக உள்ளது. உலக நிலைத்தன்மை பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இந்தியா - இங்கிலாந்து இடையே வளர்ந்து வரும் கூட்டாண்மை உலகின் நிலைத்தன்மைக்கும் பொருளியல் முன்னேற்றத்துக்கும் அடித்தளமாக இருந்து வருகிறது,” என்றார் பிரதமர் மோடி.
இந்தோ - பசிபிக் வட்டாரத்தில் கடல்சார் பாதுகாப்பை அதிகரிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், உக்ரேன் மோதல் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்ததாகத் தெரிவித்தார்.
“இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மிகவும் முக்கியமானது. ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறிய பிறகு பிரிட்டன் செய்துகொண்ட ஆகப்பெரிய ஒப்பந்தம் இது. 2028ஆம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளியலாக மாற உள்ளது. இந்தியாவுடனான வர்த்தகம் விரைவாகவும் மலிவாகவும் மாறவுள்ள நிலையில், அங்கு பெறக்கூடிய வாய்ப்புகள் இணையற்றவை,” என்றார் ஸ்டார்மர்.